சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று புதன்கிழமை நுகேகொட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக விசாரணைளை மேற்கொண்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கடந்த 14 ஆம் திகதி மாதிவெலயிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து ரஞ்சன் ராமநாயக்கவை கைதுசெய்தனர்.

சமூக வலைத்தளங்களில் வெளியான தொலைபேசி உரையாடல்கள் மூலம் ரஞ்சன் ராமநாயக்க, நீதிபதிகளின் செயற்பாடுகளுக்கு தலையீடு செய்துள்ளதாகவும் இது அரசியலமைப்பின் 111 ஆவது சரத்தின் கீழ் குற்றம் எனத் தெரிவித்து அவர் கைதுசெய்யப்பட்டார்.

இதனை அடுத்து இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.