வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்டோர் இறந்து விட்­ட­தா­கவும் இது தொடர்பில் அரசு விரைவில் இறந்­த­வர்­களின் உற­வு­க­ளுக்கு மரணச் சான்­றி­தழ்­களை வழங்­க­வுள்­ள­தா­கவும் ஐக்­கிய நாடுகள் சபையின் வதி­விட பிர­தி­நிதி ஹனா சிங்­க­ரிடம் ஜனா­தி­பதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த வாரம் கூறி­யுள்ளார். மேலும் முறை­யான விசா­ர­ணை­களின் பின்­னரே மரணச் சான்­றி­தழ்கள் வழங்­கப்­படும் என ஜனா­தி­பதி பின்பு கூறி­யி­ருந்த போதிலும் அவ­ரது கருத்­துக்கள் வீதி­யோ­ரங்­களில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­வதன் மூல­மா­கவும் காணாமல் ஆக்­கப்­ப­ட்­ட­வர்­களின் அலு­வ­ல­கத்­திலும் அல்­லது நீதி­மன்­றிலும் பதில்­களை எதிர்­பார்த்து நிற்கும்  தாய்மார், மனை­விமார், சகோ­த­ரிகள் மற்றும் பிள்­ளை­க­ளுக்கு இது அவ­ம­திப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

தனது கருத்­துக்கள் மூலம் தான் குற்­றத்தை ஒப்­புக்­கொள்­வது போன்று ஜனா­தி­பதி உண­ர்ந்­தி­ருக்­கலாம். முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவும் 2016 ஆம் ஆண்டு காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் இறந்­தி­ருக்­கலாம் என்ற கருத்தை தெரி­வித்தார். அப்­பொ­ழுது பெண்கள் செயற்­பாட்டு வலை­ய­மைப்­பா­னது அக்­க­ருத்தை கண்­டித்­தது போன்றே இப்­பொ­ழுதும் ஜனா­தி­ப­தியின் கருத்தை கண்­டிக்­கின்­றது. எனினும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யுத்­தத்தின் கடைசிக் கட்­டத்­திலும் அதை தொடர்ந்தும் நாட்டை ஆட்சி செய்­ய­வில்லை. ஆனால் தற்­போ­தைய ஜனா­தி­பதி பாது­காப்புச் செய­லா­ள­ராக அக்­கா­ல­ கட்­டத்தில் கட­மை­யாற்­றினார். மே 18. 2009 அன்று தற்­போ­தைய இர­ாணுவ தள­பதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் 58ஆவது பிரிவில் அருட்­தந்தை பிரான்சிஸ் ஜோசேப்புடன் இணைந்து ஆயி­ரக்­க­ணக்­கி­லானோர் சர­ண­டைந்­தனர். சர­ண­டைந்­த­வர்கள் பஸ் வண்­டி­களில் ஏற்­றப்­பட்­டதை கண்ட உற­வுகள், அவர்­களை மீண்டும் காணவே இல்லை. வலிந்து காண­ாம­லாக்­க­ப்பட்டோர் இறந்து விட்­ட­ார்கள் என்றால் அவர்கள் எவ்­வாறு இறந்­தனர்? யார் அவர்­களைக் கொன்­றது? எப்­பொ­ழுது, எங்கே, ஏன் மற்றும் எவ்­வாறு அவர்கள் கொல்­லப்­பட்­டனர்? அவர்­க­ளது சட­லங்கள் எங்கே? எவ்­வ­ளவு கால­மாக உண்மை முடக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது?  

ஒரு குறிப்­பிட்ட நிகழ்­வினை நோக்­கு­வோ­மாயின், பாலேந்­திரன் மகிந்­த­னுக்கு நேர்ந்­தது என்ன? புனர்­வாழ்­விற்­காக அவ­ரது தாய் பாலேந்­திரன் ஜெயக்­கு­மாரி தனது மகனை இரா­ணு­வத்­திடம் கைய­ளித்தார். பின்னர் கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்­க­த்திற்­கான ஆணைக்­கு­ழு­வினால் வெளியி­டப்­பட்ட நூலில் அவ­ரது படம் ஒன்று பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. அவரும் உயி­ருடன் இல்­லையா? 2014ஆம் ஆண்டு அவ­ரது தாய் ஒரு வரு­டத்­திற்கும் மேலாக பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார். அவ­ரது வழக்­குகள் தொடர்ந்து நடை­பெ­று­கின்­றன. இவ்­வா­றான சிக்கல் நிலைக்கு அவர் தள்­ள­ப்பட்­ட­மைக்­கான ஓர் காரணம் மறுக்­க­மு­டி­யாத ஆதா­ரங்­க­ளுடன் அவர் நீதி கேட்டு முன்­ன­ணியில் நின்று போரா­டி­ய­மை­யாகும். புனர்­வாழ்­விற்­காக இரா­ணு­வத்­திடம் கைய­ளித்த தனது மக­னுக்கு என்ன நடந்­தது என்ற உண்­மையை தெரிந்து கொள்­ளாமல் அவ­ரது மக­னுக்­கான மரண சான்­றி­த­ழையும் இழப்­பீட்­டையும் பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மென அரசு தற்­பொ­ழுது எதிர்­பார்க்­கின்­றதா?

வலிந்து காணா­ம­லாக்­க­ப்பட்ட அநே­க­மா­ன­வர்கள் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளினால் கடத்­தப்­பட்­டார்கள். அல்­லது கட்­டாய ஆட்­சேர்ப்­புக்­குள்­ளா­னார்கள் என ஜனா­தி­பதி கூறு­கின்றார். ஆனால் போரின் இறுதிக் கட்­டத்­திலும் போருக்கு பின்­னரும் காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நேர்ந்­தது? பயங்­க­ர­வாதம் தோற்­க­டிப்­பட்­ட­தென கோத்தபாய

ராஜ­பக்ஷவினால் பறை­சாற்­றப்­பட்ட பின்­னரும் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்­களும் வெள்ளை வாக­னத்தில் கடத்­தப்­பட்ட சம்­ப­வங்கள் பல பதி­வா­கி­யுள்­ளன. தற்­பொ­ழுது அவர்கள் எங்கே வைக்­கப்­பட்­டுள்­ளனர்? பல சாட்­சி­க­ளுக்கு முன்­னி­லையில் தங்­க­ளது உற­வு­களால் இரா­ணு­வத்­திடம் கைய­ளிக்­கப்­பட்டு சர­ண­டைந்­த­வர்கள் தொடர்பில் தற்­பொ­ழுது எவ்­வித தக­வல்­களும் இல்­லாமல் இருப்­ப­வர்­களின் நிலை­யென்ன?  

என்ன நடந்­தது? யார் காரணம்? என்ற உண்­மையை கண்­ட­றி­யாது பாதிக்­கப்­பட்ட உற­வு­களை வாழ்க்­கையை முன்­னோக்கி கொண்டு செல்ல கூறு­வது நடை­முறைச் சாத்­தி­ய­மற்ற ஓர் விட­ய­மாகும். இவ்­வாறு கூறு­வது, மனித மட்­டத்தில், வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்டோர் விட­யத்­தினை முறை­யாக கையாள்­வதன் முக்­கி­ய­த்துவம் தொடர்பில் ஓர் அலட்­சியப் போக்­கி­னையும், அறி­யா­மை­யையும் அரசு  கொண்­டுள்­ளது என்­பதை இது எடுத்துக் காட்­டு­கின்­றது. மரணச்சான்­றி­தழ்கள் மற்றும் இழப்­பீ­டுகள் மூல­மாக தங்­க­ளது நியா­ய­மான கோரிக்­கை­களை முடி­வுக்கு கொண்­டு­வரும் அரசின் முயற்­சி­களை உற­வுகள் பல வரு­டங்­க­ளாக எதிர்த்து வரு­கின்­றன. அவர்­க­ளது கோரிக்­கை­களும் உள்­ளீ­டு­க­ளுமே காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­லக சட்­டத்தில் காணாமல் போன­மைக்­கான சான்­றிதழ் முறைமை உரு­வா­னது (காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­லக சட்டம் 2016 இல. 14, பிரிவு 13). உண்­மையைக் கண்­ட­றிதல் என்­பது காணாமல் போன உற­வுகள் உயிர் வாழ்­கின்­றார்­களா என்­பதை மாத்­திரம் தீர்­மா­னிக்கும் ஒன்­றல்ல, மாறாக அவர்­க­ளுக்கு நடந்­தது என்­ன­வென முழு­மை­யாக அறியும் ஓர் செயற்­பாடு என்­பதை நாளாந்தம் வீதி­யோ­ரங்­களில் அமைதி ஆர்ப்­பாட்டம் நிகழ்த்தும் பாதிக்­கப்­பட்ட உற­வுகள் நமக்கு வலி­யு­றுத்­து­கின்­றனர். ஒரு முழு­மை­யான தீர்­வினைப் பெற்றுக் கொடுக்கும் வரை பாதிக்­கப்­பட்ட உற­வு­களின் வடுக்கள் ஆறாத நிலை காணப்­படும். அத்­துடன் இது நல்­லி­ணக்கம் மற்றும் சமா­தான உரு­வாக்­கத்­திற்கு ஒரு தடை­யா­கவும் இரு­க்­கலாம்.

பெப்­ர­வரி மாதத்தில் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை காணப்­ப­டு­கின்­றது. தீர்­மானம் 30/1 தொடர்பில் அரச செயற்­பா­டு­களின் முன்­னேற்றம் பேசப்­பட்டு ஆரா­யப்­படும். நமது ஜனா­தி­ப­தியின் கடந்த வார கருத்­துக்­களும் இதை மையாகக் கொண்டே கூறப்­பட்­டது எனக் கருத வாய்ப்­புக்கள் உண்­டு-­ அ­தா­வது முன்னர் கொடுத்த வாக்­கு­று­தி­களில் இருந்து விலகிச் செல்­வ­தற்­காண முதல் படியே இது­வாகும். உண்­மை­யி­லேயே பல மாற்­றங்­களை புதிய அரசு மேற்­கொள்­வதை நாம் அவ­தா­னிக்­கின்றோம். உதா­ர­ண­மாக முக்­கி­ய­மான மனித உரிமை வழக்­கு­களை விசா­ரணை செய்து வரும் அதி­கா­ரிகள் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கப்­பட்டு அவர்­க­ளது பத­விகள் பறிக்­கப்­ப­டு­கின்­றன. தங்­க­ளது வழக்­குகள் தொடர்­பாக காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­ல­கத்தில் அல்­லது நீதிமன்றில் விசா­ரிக்கும் பாதிக்­கப்­பட்ட உற­வுகள் பல்­வேறு துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு ஆளா­கின்­றனர். அதே போல சில சட்­டத்­த­ர­ணி­களும் தங்­க­ளது குடும்ப உறுப்­பி­னர்­களின் பாது­காப்பு தொடர்­பாக அஞ்­சு­கின்­றனர். காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் இறந்­து­விட்­டனர் என்ற ஜனா­தி­ப­தியின் கருத்­துக்கள் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­லக செயற்­பா­டு­களின் முக்­கி­யத்­து­வத்­தினை வலு­வற்­ற­தாக காட்­டு­கின்­றது. விசா­ர­ணைக்கு பின்­னரே இறப்புச் சான்­றி­தழ்கள் வழங்­கப்­ப­டு­மென அவர் தெளிவு­ப­டுத்­தி­யதன் மூல­மாக விசா­ர­ணைகள் வெறும் கண்­து­டைப்­புக்கு மாத்­தி­ரமே நடை­பெ­று­கின்­றன என்­ப­தையும் இறப்புச் சான்­றி­தழ்கள் வழங்­கு­வது முன்­கூட்­டியே முடி­வெ­டுக்­கப்­பட்ட ஒரு விடயம் என்­ப­தையும் சுட்டிக் காட்­டு­கின்­றது. மேலும், பல­னற்ற பல்­வேறு விசா­ர­ணை­களைக் கொண்ட இலங்­கையின் வர­லாறு உண்­மையைக் கண்­ட­றிய போரா­டு­ப­வர்­க­ளுக்கு எவ்­வித ஆறு­த­லையும் அளிக்கப் போவ­தில்லை.

ஐக்­கிய நாடுகள் சபையின் வதி­விட பிர­தி­நி­திக்கு நாட்டின் ஜனா­தி­பதி கூறிய கருத்­துக்கள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபை அமைதி காப்­பது ஒரு கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். காணாமல் போன மற்றும் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களைக் கண்­ட­றிய ஒரு விரி­வான, வெளிப்­படைத் தன்மை கொண்ட செயற்­திறன் மிக்க ஓர் பொறி­மு­றை­யின்­மை­யா­னது வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் பாரிய மன உளைச்­ச­லுக்கு முகங் கொடுக்க வேண்­டிய நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என ஐ.நா. வின் தன்­னிச்­சை­யாக மற்றும் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான செயற்­பாட்டுக் குழு 2016இல் வெளியிட்ட ஓர் அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது. .(A/HRC/33/51/Add.2,¶19.)   மேலும் "உள்­நாட்டு யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்­க­ளான பின்­னரும் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற நீண்ட தூரம் செல்ல வேண்­டிய நிலை காணப்­ப­டு­கின்­றது” என 2019 இல் வெளியான செயற்­பாட்டுக் குழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. (A/HRC/42/40/Add.1, ¶19.).  இக்­கண்­டு­பி­டிப்­பு­க­ளுக்கு இணங்க, வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­க­ளுக்கு, உண்மை மற்றும் நீதியை வழங்க வேண்­டிய ெபாறுப்பு இலங்­கைக்கு உள்­ளது என்ற கருத்தை ஐக்­கிய நாடுகள் சபை கொண்­டி­ருத்தல் வேண்டும். ஜனா­தி­ப­தியின் கருத்­துக்கள் இவ்­வி­ட­யத்தில் இலங்­கையின் வாக்­கு­று­தி­களை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான தனது நோக்­கத்தை வெளிப்­ப­டுத்­து­கின்­றது. இச்­ச­மிக்­ஞையை ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய வகையில் இலங்கை மக்­களின் சார்­பாக சர்­வ­தேச சமூ­கத்­திற்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை அவ்­வ­ளவு எளி­தாக ஒதுக்­கிவிட முடி­யாது என்­பதை ஐ.நா. பிர­க­ட­னப்­ப­டுத்தல் வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து அனைத்து நபர்களும் பாதுகாக்கப்படுவதற்கான சர்வதேச சமவாயத்தில் இலங்கை அரசு கைசாத்திட்டு அங்கீகரித்து அதனை ஒரு சட்டமாக இலங்கை உள்வாங்கியுள்ளது. இது நம் தேசத்தின் சட்டம் அதனால் "வலிந்து காணாமலாக்கப்பட்டமைக்கான சூழ்நிலை, சட்ட அமுலாக்கல் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் விசாரணையின் முன்னேற்றமும் முடிவுகளும், மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட நபரின் தற்போதைய நிலை தொடர்பிலான உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் பாதிக்கப்பட்டவரின் ஒவ்வொரு உறவினருக்கும் உரிமை உண்டு." (வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களும் பாதுகாக்கப்படு­வதற்கான சட்டம் 2018 இல. 05, பிரிவு 14(1)). ஒரு முழுமையான உண்மையை கண்டறியும் செயல்முறையில் ஈடு­பட்டு இலங்கை அரசாங்கம் இந்த உரிமையை மதிக்க வேண்டும். அவ்வாறு நடைபெறாத பட்சத்தில், சர்வ­தேச சமூகம் மாத்திரமே தங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுதர முடியுமென்ற நம்பிக்கை பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிகரிக்கும்.  

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்துக்கு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு கண்டனம் தெரிவித்து உண்மை மற்றும் நீதியை பெற்றுத்தருமாறு அரசுக்கும் ஐ.நாவுக்கும் விடுத்துள்ள வேண்டுகோள் இது என்பதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செயற்படும் ஒன்பது பெண்கள் குழுக்களின் கூட்டே பெண்கள் செயற்பாட்டு அமைப்பு.