கொரோனா வைரஸ் தொற்றிய சீனப் பெண் சுற்றுலா சென்ற கண்டி, நுவரெலியா, காலி, சிகிரியாவில் சிறப்பு ஆய்வு

Published By: Digital Desk 3

29 Jan, 2020 | 03:11 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபராக சீன சுற்றுலாப் பயணி ஒருவர்  இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர் சுற்றுலா சென்ற, தங்கியிருந்த இடங்களில்  அவ்வைரஸ் தாக்கம் தொடர்பில் விஷேட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்கவின் விஷேட ஆலோசனைக்கு அமைய, சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினரின் உதவியுடன் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 19 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை குறித்த தொற்றுக்குள்ளான சீனப் பெண் தனது குழுவினருடன் சுற்றுலா சென்ற, தங்கியிருந்த  கண்டி, நுவரெலியா, காலி, சீகிரியா போனற பகுதிகளில் கொரோனா வைரஸ் தொடர்பில் விஷேட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் நேற்று மாலை வரை குறித்த பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான  வைரஸ் தொற்று தொடர்பில் எந்த காரணிகளும் கண்டறியப்பட்டிருக்கவில்லை.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான சந்தேகத்தின் பேரில், நேற்று மாலை வரை ஐ.டி.எச்.  அங்கொட தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் மட்டும் 20 பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.  

அதில் வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,  கொரோனா வைரஸ் குறித்த  சந்தேகத்தில்  தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில்  அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இவ்வாறு உயர்வடைந்துள்ளமை பாரிய சிக்கல்களை  தோற்றுவித்துள்ளதாகவும்    கூறினார்.

இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு தமது சங்கம் ஊடாக விஷேட கோரிக்கைகள் அனுப்பட்டுள்ளதாகவும்,  கொழும்புக்கு அருகில் இத்தகைய சந்தேகத்துக்கு இடமான நபர்களை தனித்தனியாக தடுத்து வைத்து  சோதனைகளை  செய்ய முடியுமான வண்ணம் சிறப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரியுள்ளதாகவும்  அவர் கூறினார்.  

தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சந்தேகத்தில்  அங்கொட தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில்  சிகிச்சைகளுக்காக பொது மக்கள் வருவது, அங்கு பாரிய இட நெருக்கடியையும் சமூக அவலமொன்றினையும் தோற்றுவிக்கலாம் என்பதால் இந்த கோரிக்கைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் முன்வைத்துள்ளதாக அவர் கூறினார்.

இந் நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை தவிர்ந்த நாட்டிலுள்ள  மேலும் 11 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜாசிங்க கூறினார்.

மருத்துவமனைகள்

வட கொழும்பு போதனா வைத்தியசாலை ( ராகம வைத்தியசாலை), கம்பஹா ஆரம்ப வைத்தியசாலை,  கண்டி தேசிய வைத்தியசாலை, நீர்கொழும்பு, கராப்பிட்டிய, அநுராதபுரம், யாழ்ப்பாணம், குருநாகல், மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைகள்,  இரத்தினபுரி, மற்றும் பதுளை மாகாண வைத்தியசாலைகள் ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

சந்தேகத்திற்கிடமான நோயாளர்களை அனுமதித்து தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கு குறித்த வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழ்னக்கப்ப்ட்டுள்ளதாகவும், . சோதனை, சிகிச்சை நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை     எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு 11 வைத்தியசாலைகளிலும்  இடம்பெறும் சோதனைகளில் எவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்படின் அந்த நபர் மட்டும் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு  மேலதிக சிகிச்சைகள் வழங்கபப்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

ஆலோசனைகள்  

இதனிடையே, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிர்மாண  வேலைத் தளங்களில் அதிக சீனர்கள் ஈடுபடும் நிலையில், அவர்கள் அனைவரையும் சிறப்பு மருத்துவ கண்கானிப்பின் கீழ் வைத்திருக்கும் வண்ணம் அவ்வந்த பிரதேச சுகாதார சேவைகள் அத்தியட்சகர்களினால் திட்டங்கள் வகுப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான ஆலோசனைகள் சுகாதார  அமைச்சரிடம் இருந்தும்,  அவசர நிலைமைகளை கையாள ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவிடமிருந்தும் தேவையான ஆலோசனைகள்  உரிய தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளன.

சீனப் பெண்ணின் நிலை  

இதேவேளை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள  கொரோனா வைரஸ் தொற்று உள்ள சீனப் பெண்ணுக்கு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில்   பிரத்தியேக அறையில் தீவிர சிகிட்ச்சையளிக்கப்பட்டு வருகின்றது. அவரது நிலைமை கவலைக் கிடமாக இல்லை எனவும், அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும்  அங்கொடை தொர்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் பணிப்பஆளர் வைத்தியர் அசித்த அத்தநாயக்க கூறினார். அவரை 24 மணி நேர கண்காணிப்பில் வைத்து சிகிச்சையளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸ் தொடர்பில்  சிகிச்சைப் பெற்று வரும் சீன சுற்றுலா பிரயாணியான 43 வயது பெண்,  தங்கியிருந்ததாக கூறப்படும் காலி பகுதியின் ஹோட்டல்கள் உள்ளிட்ட ஏனைய பிரதேச இடங்கள் தொடர்பிலும் சிறப்பு அவதானம்ச் எலுத்தப்ப்ட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சந்திம சிறிதுங்க கூறினார்.

தற்போதும் சிகிச்சைப் பெறும் குறித்த பெண் காலி - கோட்டை,  அஹுங்கல்லை பகுதிகளில் ஹோட்டல்களில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ள நிலையிலேயே அது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் அதிகமான சீன பிரஜைகள் வந்து செல்லும் காலியில் உள்ள இறப்பர் நூதனசாலையும்  மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

கண்டி சீகிரிய நுவரெலியா காலி பகுதிக்கு சென்ற சீன பெண்

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் கடந்த 19 ஆம் திகதியே இலங்கைக்கு சீன குழுவினருடன் சுற்றுலா வந்துள்ளார்.  அன்றைய தினம் அவர் கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். அதன் பின்னர் மறு நாள், 20 ஆம் திகதி நீர் கொழும்பிலிருந்து சீகிரிய நோக்கி சென்றுள்ளதுடன்,  சீகிரிய பகுதியில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.  பின்னர் 21 ஆம் திகதி  சீகிரியாவில் இருந்து கண்டிக்கு சென்றுள்ளதுடன்,  அங்கும் மூன்று ஹோட்டல்களில் அன்றைய தினமும் மறு நாளும்  தங்கியிருந்து உணவுகளைப் பெற்றுள்ளார்.  22 ஆம் திகதி  கண்டியிருந்து நுவரெலியாவுக்கு சென்றுள்ளதுடன் நுவரெலியாவில்,  சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் அவர் அன்று தங்கியிருந்துள்ளார். அதன் பின்னரே  23 ஆம் திகதி நுவரெலியாவிலிருந்து  தென் மேற்கு கடற் கரையோரங்களுக்கு அவர் சுற்றுலா சென்றுள்ளார்.  அங்கு 23, 24 ஆம் திகதிகளில் காலி, அஹுங்கல்லை பகுதிகளில் 3 ஹோட்டல்களில் அவர் தங்கியிருந்து உணவு பெற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்தே 25 ஆம் திகதி அவர் அஹுங்கல்லை வைத்தியசாலையில்  காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்தே அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையிலேயே குறிரித்த பெண் சென்ற, தங்கியிருந்த, உணவுப் பெற்றுக்கொண்ட பகுதிகள், ஹோட்டல்கள் தொடர்பில்  தொற்று நோய் தடுப்புப் பிரிவினரின் விஷேட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்

விசேட தொலைபேசி இலக்கங்கள்

இவ்வாறான பின்னணியிலேயே கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல் அறிந்துகொள்வதற்கு, பொது மக்களுக்கு என  அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 071 0107107 , 011 3071073 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்ததுடன்  அந்த தொலைபேசி இலக்கங்களுக்கு சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் சார்பில்  உருவாக்கப்பட்டுள்ள விஷேட பிரிவு பதிலளிக்கும் எனவும் குறிப்பிட்டது.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றுக்கு  எதிராக அல்லது அதனை பரவ விடாமல் செய்ய உழைக்கும் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பிரிவினருக்கு விஷேட ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிருபம் ஒன்று  நேற்று  வெ ளியிடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அவர்களை பாதுகாத்துக்கொள்வது தொடர்பில் குறித்த சுற்றுநிருபம் வெ ளியிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், விமான நிலையத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மருத்துவக் குழு, சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலை நிர்வாகக் குழுவினர் முகக்கவசம் அணிவதுடன், கையுறைகள் மற்றும் மருத்துவர்கள் பயன்படுத்தும் தலையை மூடும் வகையிலான கவசத்தை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதனைத்தவிர, வைரஸ் பரவுவதைக் குறைப்பதற்கான ஆலோசனைகள் அடங்கிய 4 பக்கங்களைக் கொண்ட விசேட ஆலோசனை சுகாதார அமைச்சினால் வெ ளியிடப்பட்டுள்ளது, வெ ளி நாட்டிலிருந்து நாட்டிற்கு வருகைதருபவர்கள் தமது தகவல்கள் வெ ளிப்படுத்தும் விண்ணப்பத்தை முழுமையாக நிரப்புதல் அவசியமாகும். இதனுடாக, சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் காலம், அவர்கள் பயணிக்கவுள்ள பகுதிகள் மற்றும் தங்கும் ஹோட்டல்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்த கொரோனா  வைரஸ் முதலில் பரவிய சீனாவில்  நேற்று நண்பகல்  வரை 106 பேர் உயிரிழந்திருந்தனர்.  அத்துடன் 4515 பேர் குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் பலரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக சீனாவிலிருந்து கிடைக்கும் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த தொற்று  பரவும் வீதம் 50 வீதத்தால்  அதிகரித்துள்ளதாக சீன அதிகாரிகள் கூறினர்.

இவ்வாறான பின்னணியில்  தாய்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்வான், தென் கொரியா, பிரான்ஸ், ஜப்பான், வியட்நாம்,  நேபாளம், கனடா, கம்பூடியா, இலங்கை மற்றும் ஜேர்மனி ஆகிய  நாடுகளிலும்  கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கண்டறியப்ப்ட்டுள்ள நிலையில்,  குறித்த நாடுகளில் அந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03
news-image

முச்சக்கரவண்டியின் பாகங்கள்,ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது

2025-02-09 17:27:04
news-image

தோணா பாலம் - மீள் கட்டுமான...

2025-02-09 17:25:24
news-image

கெக்கிராவயில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2025-02-09 17:24:34
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

2025-02-09 17:02:16
news-image

நாட்டில் 80 வீதமான பகுதிகளுக்கு மின்...

2025-02-09 17:20:22
news-image

களுவாஞ்சிக்குடியில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதானவரிடம்...

2025-02-09 17:15:32