இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க நிர்வாகத்தினால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மத்திய கிழக்கு திட்டத்திற்காக டெனால்ட் ட்ரம்பை பெஞ்சமின் நெதன்யாகு சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இவ்வாறு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மூன்று தனித்தனி ஊழல் வழக்குகளின் படி இலஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கையை மீறியமைக்காவே பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அந் நாட்டு சட்டமா அதிபர் ஜெனரல் அவிச்சாய் மண்டெல்பிட் இன்றைய தினம் ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை சமர்ப்பித்தார்.

எனினும் இதற்கு மறுப்புத் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தான் நிரபராதி எனவும் வலியுறுத்தியுள்ளார். 

எவ்வாறெனினும் இது தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில் விசாரணைக்கான திகதி உறுதிப்பட இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு தொடர்பான விசாரணைகள் நீதிமன்றத்தில் இடம்பெறும் பட்சத்தில், இஸ்ரேலின் வரலாற்றில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் முதல் இஸ்ரேலிய பிரதமராக இவர் இருப்பார்.

இஸ்ரேலிய சட்டத்தின் கீழ், நெத்தன்யாகு குற்றச்சாட்டின் பேரில் இராஜினாமா செய்ய வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.