(எம்.எப்.எம்.பஸீர்)

சட்ட மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்க, சட்ட ரீதியிலான எந்த அதிகாரமும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு இல்லை என  தெரிவித்த சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு சட்டத்தின் பிரகாரம் ஸ்தபிக்கபப்டும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவொன்றுக்கு  நீதிமன்றம் ஒன்றின் முன்னிலையில் விசாரிக்கப்படும் வழக்கொன்று தொடர்பில் உத்தரவிடும் அதிகாரம்  அல்லது அதனை இடை நிறுத்தும் அதிகாரம், உரிமை  சட்ட ரீதியாக  ஆணைக் குழுவுக்கு இல்லை என அந்த கடிதத்தில் சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

தமது விசாரணைகள் நிறைவுபெறும் வரை கடற்படையின் முன்னாள் தளபதி அத்மிரல் ஒப் தி ப்ளீட்  வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, சட்டமா அதிபருக்கு முன்னதாக அறிவித்திருந்தது.  அதற்கு பதிலளித்தே சட்ட மா அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.