(எம்.மனோசித்ரா)

இலங்கையில் தங்கியிருக்கும் சீனர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதா என்பதை முதலில் கண்டறிய வேண்டும் என  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 

சீனாவில் உருவாகி பரவியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார். இலங்கையில் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இணங்காணப்பட்டுள்ள பெண் சீனா பிரஜையாவார். அவருக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

எனினும் சீன பிரஜைகளுக்கு பயணத்தடை விதிப்பதால் மாத்திரம் கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட முடியாது. ஏற்கனவே வருகை தந்தவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனரா என்பதை கண்டறிய வேண்டியதற்கான நடவடிக்கைகளையே நாம் முன்னெடுக்க வேண்டும். 

எம்மால் இயன்றவரை கொரோனா வைரஸ் இலங்கையில் பரவாதிருப்பதற்கான நடவடிக்கைகளில் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.