கொலம்பியா-பெரு எல்லைக்கு அருகிலுள்ள காட்டில் தனது மூன்று குழந்தைகளுடன் 34 நாட்கள் தொலைந்து போன தாய் ஒருவரையும் குழந்தைகளையும் கொலம்பிய கடற்படையினர் மீட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி விடுமுறை நாட்களை கழிப்பதற்காக கொலம்பிய காட்டுபகுதிக்குச் சென்றிருந்த 40 வயதுடைய தாய் மற்றும் 14, 12, 10, வயதுடைய அவரது மூன்று குழந்தைகள், டிசம்பர் 19 ஆம் திகதியன்று காட்டில் வழி தவறி காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், தந்தையின் முறைப்பாட்டுக்கு அமைய குறித்த தாய் மற்றும் 3 பிள்ளைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த கொலம்பிய கடற்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய் மற்றும் 3 குழந்தைகள் உட்பட நால்வரையும் உயிருடன் மீட்டுள்ளனர்.

வழி தெரியாமல் பெருவுக்குள் நுழைந்து புட்டுமயோ நதியைப் பின்தொடர்ந்து சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

பழங்குடி செகோயா சமூக உறுப்பினர்கள் பெருவியன் அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலை அடுத்து காணாமல்போன தாய் மற்றும் பிள்ளைகளை கொலம்பிய கடற்படையினர்  கண்டுபிடித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொலம்பியாவின் எல்லைக்கருகில் இருக்கும் யூபினெட்டோவின் வடக்கு பெருவியனிலுள்ள லா எஸ்பெரான்சா கிராமத்திற்கு அருகே இவர்கள் நால்வரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மீட்கப்பட் குடும்பத்தை சந்தித்த தந்தை தமது அன்பை பகிர்ந்து கொண்ட நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

34 நாட்களாக காட்டில் வெறுங்காலுடன் அலைந்து, காட்டுப் பழங்களை உண்டு உயிர்வாழ்ந்த இவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.