(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் 2015ம் ஆண்டு கொண்டு வந்த 30.1 தீர்மானத்திற்கு ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கமாட்டோம்.

இத்தீர்மானத்தை திருத்தியமைக்க அரசாங்கம் வாய்ப்பு கோருவதாக குறிப்பிடும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என  சர்வதேச  உறவுகள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பிரதமர் காரியாலயத்தில்  இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43வது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி  தொடக்கம்  மார்ச் மாதம் 20ம் திகதி வரை இடம் பெறவுள்ளது.

இலங்கை தொடர்பான விவாதம் மார்ச் மாதம் இடம் பெறும். இக்கூட்டத்தொரை இம்முறை அரசாங்கம் மாறுப்பட்ட விதத்திலே அனுகும்.

2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம் பெற்றதை தொடர்ந்து ஐக்கிய  நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில்   30.1  தீர்மானம்  கொண்டு வரப்பட்டது.

இத் தீர்மானத்திற்கு அப்போதைய வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீர பாராளுமன்றத்திற்கும்,முன்னாள் ஜனாதிபதிக்கும் பிரேரணை தொடர்பில் முன்னறிவிக்காது. இணையனுசரனை வழங்க இணக்கம் தெரிவித்தார்.

இது அரசாங்கத்தின் நிலைபபாடு அல்ல அவரது தனிப்பட்ட தீர்மாணம்.

30. 1 தீர்மானத்தில் குறிப்பிட்ட விடயங்கள் முற்றிலும் இலங்கை  அரசியலமைப்பிற்கு முரணானவை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கடந்த வருடம் இடம் பெற்ற 40வது கூட்டத்தொடரின் போது எடுத்துரைத்தார்.

கடந்த அரசாங்கம் மேற்குலக நாடுகளினதும் ,தொண்டு  அமைப்புக்களின்  விருப்பத்திற்கு இணங்கவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் செயற்பட்டது. இவர்களை போல் செயற்படுவதற்கு எமக்கு அவசியம் கிடையாது என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.