(நா.தனுஜா)

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபரொருவர்  அடையாளங்காணப்பட்டிருக்கும் நிலையில், இதனை அவசர சூழ்நிலையாகக் கருதி உடனடியாகப் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியிருக்கிறார்.

அதுமாத்திரமன்றி தற்போது முழு நாட்டையும் பாதுகாத்துக்கொள்வதை முன்நிறுத்துவதுடன், ஏனைய அரசியல் வேறுபாடுகள் அனைத்தையும் புறந்தள்ளி அரசாங்கம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் நேற்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே, இந்நோய்த்தொற்று நிலை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  இன்று வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தற்போது சீனா உள்ளடங்கலாக உலக நாடுகள் அனைத்தும் நெருக்கடி நிலையொன்றை எதிர்கொண்டிருக்கின்றன.

இந்த வைரஸ் சீனாவின் வூஹான் பிரதேசத்திலேயே முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் நோய் எதிர்ப்புசக்திக்கும் எவ்வித பிரதிபலிப்பையும் காண்பிக்காதிருப்பது என்பது கவனத்திலெடுக்கப்பட வேண்டிய காரணியாகும்.

இலங்கை இந்த நோய்த்தொற்றுப் பரவக்கூடிய எச்சரிக்கைக்குரிய நாடாக இருப்பதாகவும், எனவே அரசாங்கம் இதுகுறித்து விசேட கவனம் செலுத்தவேண்டும் எனவும் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது நான் வலியுறுத்தியிருந்தேன்.

அதுமாத்திரமன்றி தற்போது இந்த வைரஸ் தொற்றின் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியிருக்கும் நிலையில், இலங்கையானது உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் அமெரிக்காவில் செயற்படும் நோய்க்கட்டுப்பாடு, நோய்த்தடுப்பு மத்திய நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்டு இந்நெருக்கடிக்குத் தீர்வினைக் கண்டறிய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரொருவர் எமது நாட்டில் கண்டறியப்பட்டிருக்கிறார். இத்தருணத்தில் முழு இலங்கையையும் பாதுகாத்துக்கொள்வதை முன்நிறுத்தி, அரசியல் வேறுபாடுகளைப் பின்தள்ளி ஒன்றிணைவது அரசாங்கம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரதும் கடமையாகும் என அவர் தெரிவித்தார்.