மலையகத்தின் புகழ்பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மல்லிகை சி.குமாரின் மறைவு, மலையக இலக்கியத்திற்கு ஓர் பேரிழப்பாகும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், மலையக இலக்கியம் மக்கள் இலக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மக்களின் வாய்மொழியாகவே மலையக இலக்கியம் ஊற்றெடுத்தது. காலத்தின் போக்கில் நவீன இலக்கிய வடிவங்களாக அவை பரிணமித்த பின்னரும் அந்த மக்களிடத்தில் இருந்து இலக்கியம் விலகிவிடவில்லை. அத்தகைய மக்கள் மத்தியில் தொழிலாளர்களாக இருந்து கொண்டே நவீன இலக்கிய படைப்பாளிகளாக உருவெடுத்தவர்களில் மல்லிகை சி குமார் முக்கியமானவர். குறிஞ்சித் தென்னவன் மறைவின் பின்னர் அந்த இடத்தை இட்டு நிரப்பிவந்த மல்லிகை சி குமாரின் மறைவு ஒரு பாரிய இடைவெளியை தோற்றுவித்துள்ளதை மறுக்க முடியாத உண்மையாகும் என அவர் மேலும்  தெரிவித்தார்.

அடுத்ததாக,  மலையகத்தின் புகழ்பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மல்லிகை சி.குமாரின் மறைவு, மலையக இலக்கியத்திற்கு மட்டுமல்லாது ஈழத்து இலக்கியத்திற்கும் பேரிழப்பாகும், என பதுளை மாவட்ட கலை இலக்கிய வட்டத்தின் செயலாளர் வை. தேவராஜா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.           

மேலும் அவரது இரங்கல் செய்தியில் மல்லிகை சி.குமார் பல்துறை ஆளுமையாளராக இருந்து தனித்துவமான பாதையில் மலையக இலக்கியத்திற்கு வலு சேர்த்து வந்த இவர், இடதுசாரி கொள்கையுடையவராக காணப்பட்டார்.

தொழிலாளர் அடக்குமுறைக்கு எதிராக பல சிறுகதைகளையும், கவிதைகளையும் படைத்து மலையக மக்களின் விடுதலை போராட்டத்திற்காக தனது எழுத்துக்களை பயன்படுத்தி சமூக விடுதலைக்கு பங்களிப்பு செய்தார். ஓவிய கலையிலும் ஆர்வம் கொண்ட இவர் பல ஓவியங்களை வரைந்துள்ளார்.

இறுதி காலம் வரை கொள்கை பிடி தளராமல் இருந்து இளைய தலைமுறையினரின் இலக்கிய வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கியுள்ளார். அவரது பிரிவால் துயருரும் குடும்ப உறுப்பினர்களுக்கு தமது கலை இலக்கிய வட்டத்தின் இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.