இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்தப் பெண், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டதனால், இலங்கையில் இத்தொற்றுக் குறித்த அவதானமாக இருக்கும்படி பொதுமக்கள் பணிக்கப்பட்டுள்ள நிலையில், வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பிரிவினருக்கு ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது தொடர்பில் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், விமான நிலையத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மருத்துவக் குழு, சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலை நிர்வாகக் குழுவினர் முகக்கவசம் அணிவதுடன், கையுறைகள் மற்றும் வைத்தியர்கள்  பயன்படுத்தும் தலையை மூடும் வகையிலான கவசத்தை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இதனைத்தவிர, வைரஸ் பரவுவதைக் குறைப்பதற்கான ஆலோசனைகள் அடங்கிய 4 பக்கங்களைக் கொண்ட விசேட ஆலோசனை சுகாதார அமைச்சினால்  வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தருபவர்கள் தமது தகவல்கள்  வெளிப்படுத்தும் விண்ணப்பத்தை முழுமையாக நிரப்புதல் அவசியமாகும்.

இதனுடாக, சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் காலம், அவர்கள் பயணிக்கவுள்ள பகுதிகள் மற்றும் தங்கும் ஹோட்டல்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது.