கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை 4,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சீனாவின் பிரதான நகரங்களில் 106 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதேவேளை உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவும் வீதம் அதிகரித்து வருவதாகவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவில் பாதிப்பு : சீனாவின் பிரதான நகரங்களில் இதுவரை 4,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 106 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக 15 நகரங்களை சீனா அரசாங்கம் தனிமைப்படுத்தியுள்ளது.

உலகளாவிய பாதிப்பு :  சீனாவைத் தவிர உலகளாவிய ரீதியில் இதுவரை 67 பேர் பாதிப்படைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மாக்கோவில் 6 பேர், ஹொங்கொங்கில் 8 பேர், அவுஸ்திரேலியாவில் 5 பேர், கம்போடியாவில் ஒருவர், ஜப்பானில் 6 பேர், மலேசியாவில் 4 பேர், நேபாளத்தில் ஒருவர், சிங்கப்பூரில் 5 பேர், வடகொரியாவில் 4 பேர், இலங்கையில் ஒருவர், தாய்வான் 5 பேர், தாய்லாந்தில் 8 பேர், வியட்நாமில் 2 பேர், கனடாவில் ஒருவர், அமெரிக்காவில் 5 பேர், பிரான்ஸில் 3 பேர் மற்றும் ஜேர்மனியில் ஒருவர். 

கொரோனா வைரஸானது தொடர்பு மூலமாகவும், நீர்த்துளிகள் மூலமாகவும் பரவுவக்கூடும் என சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போதோ அல்லது இருமும்போதே வெளியாகும் நீர்த் துளிகள் மூலம் வைரஸ் பரவக்கூடும். அத்துடன் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய உறவுகளை பேணுவதன் மூலமாகவும் வைரஸ் பரவக் கூடும்.

முன்னதாகவே சீனா 15 நகரங்களை தனிமைப்படுத்தியுள்ள நிலையில‍ை, கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்படாத சீனாவின் தீபெத் முதல் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் திங்கட்கிழமை முதல் காலவரையின்றி மூடுவதாகவும் சீனா அறிவித்துள்ளது.

திபெத்துக்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிலிப்பைன்ஸ் குடிவரவு பணியகம் செவ்வாய்க்கிழமை சீனர்களுக்கு நாட்டுக்கு வந்திறங்கியவுடன் வழங்கப்படும் விசாவை  'On arrival visas' தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இதனிடையே சீன புத்தாண்டு விடுமுறை புதன்கிழமை முடிவடையும்போது அரச ஊழியர்களை வீட்டிலிருந்து தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள ஹொங்கொங் அரசாங்கம் அனுமதித்துள்ளது.

எனினும் இந்த அனுமதி அவசர சேவை மற்றும் அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.