வடக்கிலிருந்து படை முகாம்களை அகற்றுவதற்கு இடமளிக்கக்கூடாது.   புலிகள் தோல்வி கண்டு விட்டார்கள். ஆனால் பிரிவினைவாதம் இன்னமும் தோல்வி காணவில்லை. இது தான் கசப்பான உண்மையாகும். புலம்பெயர் நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என அமெரிக்கா தெரிவித்துள்ளது என்று மஹிந்த ஆதரவு அணி எம்.பி. யான  உதய கம்மன்பில தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கு நிலைமைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே   போதே உதயகம்மன்பில எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். 

சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கில் தான் இலங்கையில் அதிகளவு காணிகள் உள்ளன. எனவே வடக்கிலுள்ள படைமுகாம்களை அகற்றி விட்டு அங்கு ஆரம்பகாலத்தில் வாழ்ந்தவர்களுக்கு காணிகளை வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் கேட்பது நியாயமற்ற கோரிக்கையாகும்.

அரசின் அபிவிருத்திப் பணிகள், பாதுகாப்பு விடயங்களுக்காக தனியார் காணிகள் கையகப்படுத்தப்படும் போது அதற்கு பதிலாக மாற்றுக் காணிகள் வழங்கப்படும். இது தான் நடைமுறை. 

இதனை மீறி செயற்பட முடியாது. கொத்மலை நீர்த்தேக்கத்தை அமைக்கும் போது அங்கு வாழ்ந்த மக்களுக்கு வேறு காணிகளில் வசிப்பிடங்கள் வழங்கப்பட்டன. அம் மக்கள் இன்று மீளவும் கொத்மலையில் வாழ வேண்டும் தமது பழைய காணிகளை வழங்குமாறு கேட்டால் அது சாத்தியப்படுமா? என்பதை சிந்திக்க வேண்டும். 

வடக்கிலிருந்து இராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இவ்வாறு அனைத்து முதலமைச்சர்களும் கோரிக்கை விடுத்தால் என்ன நடக்கும். புலிகள் தோல்வி கண்டு விட்டார்கள். ஆனால் பிரிவினைவாதம் இன்னமும் தோல்வி காணவில்லை. இது தான் கசப்பான உண்மை. புலம்பெயர் நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என அமெரிக்கா தெரிவித்துள்ளது என்றார்.