ஹூங்கம - தெனிய பிரதேசத்தில் கடந்த 21 ஆம் திகதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி தேரரொருவர் ஒருவர் உயிரிழந்தமை தவறுதலாக துப்பாக்கி இயங்கியமையால் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் என்று பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன அறிவித்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பதில் பொலிஸ்மா அதிபரிடமிருந்து அறிக்கையினை கோரியிருந்தது. அதற்கமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் நிறைவேற்று குழு கூடிய போது பதில் பொலிஸ்மா அதிபர் இது தொடர்பில் தெளிவுபடுத்தியதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார். 

ஹூங்கம - ஹாதாகல - தெனிய வீதியில் கடந்த 19 ஆம் திகதி ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபரை விரட்டி சென்று கைது செய்ய முற்படுகையில் ஏற்பட்ட கைகலப்பிலேயே தவறுதலாக துப்பாக்கி வெடித்துள்ளது. 

பொலிஸ் அதிகாரி தனது துப்பாக்கியை இயக்க முற்பட்டபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகிய அருகில் நின்று கொண்டிருந்த வேனில் அமர்ந்திருந்த ஹூங்கம ஹாதகல பூராண ரஜமஹா விகாரையின் தேரர் உனவட்டுன சீலரதன தேரர் கடந்த 21ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.