(ஆர்.விதுஷா)  

முன்னாள்  ஜனாதிபதியும் தற்போதைய  பிரதமருமான மஹிந்த  ராஜபக்ஷவும் அவருடன் கூட்டு சேர்ந்து முன்னாள் மத்திய வங்கி  ஆளுனரான   அஜித்  நிவாட்  கப்ரால்  போன்றோர்   மத்திய வங்கி மோசடியில்  ஈடுபட்டுள்ளனர் என எதிர்க்கட்சி  தெரிவித்துள்ளது.  

மத்திய வங்கியின்  முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை  மாத்திரமல்லாது மத்திய வங்கி பிணை முறி  மோசடி  விவகாரம்  தொடர்பில்   அஜித் நிவாட் கப்ராலும் தண்டிக்கப்பட வேண்டியவர் ஆவார்.

மத்திய வங்கி பிணைமுறி  மோசடி விவகாரம்  தொடர்பில்   முன்னெடுக்கப்பட்ட  கோப்  குழு விசாரணைகளின்  அறிக்கையில்  பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த  2015  இற்கு பின்னரான காலப்பகுதியில்   689  மில்லியன் அமெரிக்க  டொலர்  மோசடியே  இடம் பெற்றுள்ளது.  ஆயினும் 2005  - 2015  இற்கும்  இடைப்பட்ட காலப்பகுதியில் மாத்திரம்   10  ஆயிரத்து   457  மில்லியன்  அமெரிக்க  டொலர்  மோசடி இடம் பெற்றுள்ளது.

ஐ.தே. க  அரசாங்கத்தில்  ஊழலுடன்  தொடர்புடையவர்களுக்கு தண்டனை  வழங்கப்படுமாயின்  அதற்கு முன்னராக  , மோசடியில் ஈடுபட்ட   மஹிந்த  தலைமையினான  அரசாங்க  தரப்பினருக்கும்   தண்டனை  வழங்கப்படவேண்டும்.  

இந்த விவகாரம் தொடர்பில்  அப்போதைய  மத்திய வங்கி  ஆளுனரான   அஜித்  நிவாட்  கப்ராலை   கைதுசெய்து விசாரணைக்குட்படுத்த  வேண்டும்.  முன்னாள்  ஜனாதிபதியும் தற்போதைய  பிரதமருமான மஹிந்த  ராஜக்ஷவும்  இந்த விவகாரத்துடன்  தொடர்புபட்டுள்ளார்.  அவருடன் கூட்டு சேர்ந்தே   கப்ரால்  போன்றோர்   மத்திய வங்கி மோசடியில்  ஈடுபட்டுள்ளனர்.ஆகவே ,  இவ்வாறான  குற்றச்சாட்டுக்கு  உள்ளானவரையா  பிரதம  வேட்பாளராக   அறிவிக்க  போகின்றார்கள்  என்ற  கேள்வி  எழுகின்றது.

எதிர்க்கட்சி  தலைவர்  காரியாலயத்தில்  இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்  போது  உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின்   குருணாகல்  மாவட்ட  பாராளுமன்ற  உறுப்பினர்  துஷார  இந்துனில்  அமரசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.