கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,744 ஆக அதிகரித்துள்ளதாக சீனா உறுதிப்படுத்தியுள்ளது.

வுஹான், கொரோனா வைரஸ் உலகெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே சீனாவில் பலர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பிரதான நகரங்களில் இதுவரை 2,700 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி பாதிக்கப்பட்டவர்களின் அண்மைய விபரம் 

* ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை இதுவரை 2,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* சீனாவின் பிரதான நகரங்களில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சீனாவைத் தவிர ஏனைய நாடுகளில் இதுவரை 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் 4 பேர், பிரான்ஸில் 3 பேர், ஹொங்கொங்கில் 8 பேர், ஜப்பானில் 4 பேர், மாக்கோவில் 5 பேர், மலேசியாவில் 4 பேர், நேபாளத்தில் ஒருவர், சிங்கப்பூரில் 4 பேர், தென்கொரியாவில் 3 பேர், தாய்வானில் 4 பேர், தாய்லாந்தில் 8 பேர், அமெரிக்காவில் 5 பேர் மற்றும் வியட்நாமில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்ட 461 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும், சீனாவின் முக்கிய நகரங்களில் மேலும் 5,794 பேரை கொரோன வைரஸால் பாதிப்படைந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வஹான், கொரோனா வைரஸை தடுப்பது மற்றும் கடுப்படுத்துவது குறித்து ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகாரிளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளாார்.

இதன்போது சீன ஜனாதிபதி கொடிய புதிய கொரோனா வைரஸின் வேகமான பரவல் தொற்றுநோயின் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்வதில், கட்சி மத்திய குழுவின் மையப்படுத்தப்பட்ட தலைமையை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.

மக்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை முதலிடத்தில் வைக்க அனைத்து மட்டங்களிலும் அரசாங்கம் செயற்பட வேண்டும். அதனால் தொற்றுநோயை தடுப்பதும் கட்டுப்படுத்துவதும் எங்கள் பொறுப்பு என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வைரஸ் பரவாமல் தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும், அனைத்து நோயாளிகளையும் சிகிச்சைக்காக மையப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தலில் வைக்கவும் ஹூபே மாகாணத்தில் அதிகாரிகளுக்கு ஜி ஜின்பிங் உத்தரவிட்டார்.

கொரோனா வைரஸ் நேயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சீனாவில் பெரும்பாலும் எயிட்ஸ் நோய்களர்களுக்கு வழங்கப்படும் மருந்து வகைகளே பெரும்பாலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார ஆணையகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸை கட்டுப்படுத்த தற்போது பயனுள்ள மருந்துகள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்க தேசிய தேசிய சுகாதார நிறுவனம் புதிய வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்கி வருகிறது, ஆனால் வைத்திய பரிசோதனைகளின் முதல் கட்டம் நடைபெறுவதற்கு சில மாதங்கள் ஆகும்.

அத்துடன் டெக்சாஸ், நியூயோர்க் மற்றும் சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் குழு இதற்கான ஒரு புதிய தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதுவரை சீனாவின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து மற்றும் பயணத் தடைகள் மற்றும் விசேட நிகழ்வுகளை இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சீனவின் சந்தைகள், உணவகங்கள் மற்றும் இணைய தளங்களூடாக வனவிலங்குகளை விற்பனை செய்வதற்கு நாடு தழுவிய ரீதியில் தடையும் நேற்றைய தினம் விதிக்கப்பட்டுள்ளது.