ஏஎவ்பி

சீனாவின் விலங்குகள் விற்பனை மேலும் பல வைரஸ் ஆபத்தினை உருவாக்கலாம என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

17 வருடத்திற்கு முந்தைய சார்ஸ் வைரஸ் வனவிலங்குகளை உணவாக உண்பதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கவேண்டும் ஆனால் சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துள்ள வைரஸ் தாக்கம் வனவிலங்குகளை உணவாக்கிக்கொள்ளும் பழக்கம் இன்னமும் தொடர்கின்றது என்பதை புலப்படுத்தியுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சார்ஸ் வெளவாலில் இருந்து பரவியமை கண்டுபிடிக்கப்பட்டது,இந்த வைரஸ் காரணமாக சீனாவில் பலர் உயிரிழந்ததுடன்  2000ற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர்.

விலங்குகளை உண்டவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

புதிய கொரோனோவைரஸ் தாக்கத்திற்கான காரணம் என்னவென்பது குறித்த உறுதியான முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை எனினும் வுகானில் சட்டவிரோதமாக விலங்குகளை விற்ற உள்ளுர் சந்தையிலிருந்தே புதிய வைரஸ் பரவியிருக்கவேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு மிருகக்காட்சி சாலைக்கு போதுமான அளவு விலங்குகள் இந்த உள்ளுர் சந்தையில் காணப்பட்டுள்ளன,எலிகள் , பாம்புகள், வெளவால்கள் உட்பட பலவகையான விலங்குகள் இந்த சந்தையில் காணப்பட்டுள்ளன.

விலங்குகள் மாமிச வர்த்தகமும், விலங்குகளின் வாழ்விடத்தை மனிதர்கள் ஆக்கிரமிப்பதும்,மனிதர்களை விலங்குகளில் காணப்படும் வைரஸ்களிற்கு அருகில் கொண்டு சென்றுள்ளது, இந்த வகையான வைரஸ்கள் மிக வேகமாக பரவக்கூடியவை என தெரிவிக்கின்றார் தொற்று நோய் தடுப்பு குறித்த சர்வதேச அரசசார்பற்ற அமைப்பான எகோ ஹெல்த் அலையன்சின் தலைவர் பீட்டர் டஸ்சாக்

பாரிய தொற்றுநோய்களை எதிர்கொள்வதற்காக உலகை தயார் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள குளோபல் வைரோமே திட்டம் என்ற அமைப்பு வனவிலங்குகளில் கண்டுபிடிக்கப்படாத 1.7 மில்லியன் வைரஸ்கள் உள்ளன, இவற்றில் அரைவாசிக்கு மேல் மனிதர்களை தாக்ககூடியவை என தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் விலங்குகளில் இருந்து பரவும் ஐந்து வைரஸ்கள் மனிதர்களை தாக்கலாம் என எதிர்பார்க்கலாம் என்கின்றார் டஸ்ஜாக்.

வைரஸ் தாக்கம் என்பது அடிக்கடி நிகழப்போகின்றது என்பதே உண்மை என்கின்றார் அவர்.

வைரஸ்கள் காணப்படும் விலங்குகளுடன் நாங்கள் முன்னரை விட  அடிக்கடி தொடர்புகொள்கின்றோம் என்கின்றார் அவர்.

வைரஸ்கள் இயற்கையின் ஒரு பகுதி, அனைத்து வைரஸ்களும் விஞ்ஞான புனை கதை பயங்கரங்கள் இல்லை என அவர் தெரிவிக்கின்றார்.

எனினும் விலங்குகளில் இருந்து மனிதர்களிற்கு பரவும் வைரஸ்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது.

2002- 2003 இல் சீனாவிலும் ஹொங்கொங்கிலும் பலர் உயிரிழப்பதற்கு காரணமான சார்ஸ் போன்று எபோலாவும் வெளவால்களில் இருந்து பரவியது.

எச்ஐவியின் வேர்கள் ஆபிரிக்க குரங்களை சென்றடைகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று மனிதர்களை தாக்குகின்ற புதிய தொற்று நோய்களில் 60 விதமானவை விலங்குகள் மூலம் பரவுகின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்.

எங்கள் வழமையான உணவின் ஒரு பகுதியாக உள்ள கோழிகள் கால்நடைகள் கூட அவ்வப்போது நோய்க்கு காரணமாக அமைகின்றன-பறவை காய்ச்சல்.

மனிதர்கள் உடல் ஆரோக்கியத்திற்காகவும் இந்த விலங்குகளின் எதிர்காலத்திற்காகவும் இந்த வனவிலங்குகளை உண்பதை நாங்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்கின்றார், வனவிலங்கு நோய்கள் தொடர்பான ஆராய்ச்சியாளர் டயனா பெல்.

ஆனால் சார்ஸ் தாக்கி 17 வருடங்களின் பின்னரும் அது இடம்பெறவில்லை என்கின்றார் அவர்.

வனவிலங்குகளை உண்பது கூட ஆபத்தானதல்ல, குறிப்பிட்ட விலங்கை கொன்றவுடன் அதில் காணப்பட்ட வைரஸ்கள் இறந்துபோகின்றன, ஆனால் இந்த வகை விலங்குகளை கொண்டு செல்லும்போது அல்லது இறைச்சிக்காக கொல்லும்போது நோய் மனிதர்களை தாக்கும் ஆபத்து அதிகமாக உள்ளது.

வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சீனாவின் வனவிலங்கு சந்தைகள் மீது கவனம் திரும்ப தொடங்கியுள்ளதை தொடர்ந்து  நோய் ஆபத்து முற்றாக நீங்கும் வரை விலங்குகள் விற்பனைக்கு சீனா தடை விதித்துள்ளது.

எனினும் சீனா இந்த விடயத்தில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சர்வதேச வனவிலங்குகள் மாமிச சந்தையின் இன்றைய வளர்ச்சிக்கு சீனாவில் இதனை பலர் கொள்வனவு செய்ய முன்வருவதும் காரணம் என்கின்றனர் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள்.