கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிய தேசிய செயற்பாட்டு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு தழுவிய ரீதியில் இக்குழுவின் செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த தேசிய செயற்பாட்டு குழுவை நியமிக்குமாறு சுகாதார, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் பவித்ரா வன்னியசார்ரிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்று இலங்கைக்குள் பரவாமல் இருப்பதற்கும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு வாய்ந்த குழுவினர் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இக்குழுவின் உறுப்பினர்களாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியல் அட்மிரல் ஜயநாத் கொழபகே,சுகாதார செயலாளர் ஹதுனி ஜயவர்தன,சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க,மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் த சில்வா, உள்ளிட்ட விசேட வைத்தியர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக பிரிகேடியர் வைத்தியர் கிருஷாந்த பிரனாந்து, விமான சேவை நிறுவன தலைவர் ஜெனரால் பி.எச். சந்ரசிறி, குடிவரவு  குடியகழ்வு நிர்வாக  பிரிவினரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இக்குழுவினர் இன்று மாலை 5 மணிக்கு சுகாதார அமைச்சர் தலைமையில் சுகாதார அமைச்சில் முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்கள். 

அத்துடன் இக்குழுவின் ஆலோசனைகளை மற்றும் செயற்திட்டங்களை தெளிவுப்படுத்தும் விதமான விசேட  கலந்துரையாடல்  நாளை காலை 11 மணியளவில் சுகாதார அமைச்சில் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க தலைமையில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.