ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற கையெறிக் குண்டுத் தாக்குதலில் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கோஸ்டில் நடந்த திருமண நிகழ்வொன்றிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக குறித்த மாகாண பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அடில் ஹைதர் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நேற்றிரவு 10.00 மணியளவிலேயே இனந்தெரியாத நபர் ஒருவர் திருமண நிகழ்வில் இவ்வாறு கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், காயமடைந்த 20 பேரில் ஒரு குழந்தை உள்ளடங்குவதாகவும் அடில் ஹைதர் மேலும் சுட்டிககாட்டியுள்ளார்.

காயமடைந்த அனைவரும் கோஸ்டில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாகவும் உள்ளது.

இதேவேளை இத் தாக்குதல் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.