(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று இது வரையில் இனங்காணப்படவில்லை. எனினும் தொற்று உள்ளாகியிருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படும் இலங்கையர்கள் இருவரும் சீனர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவையே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமைக்கான அறிகுறிகளாகும். 

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்ததாவது : 

கேள்வி : எவ்வாறு இந்த வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது? 

பதில் : முதலில் சீனாவில் பரவிய இந்த வைரஸ் தொற்று என்னவென்பது கண்டு பிடிக்கப்படவில்லை. இரசாயன பரிசோதனைகளின் பின்னரே கொரோனா வைரஸ் என்று இனங்காணப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸானது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக் கூடியதாகும். விலங்குகளின் மூலமே பரவியுள்ளது. 

கேள்வி : கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானால் எவ்வாறான அறிகுறிகள் தென்படும்? 

பதில் : இந்த தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பவர்களுக்கு கடும் காய்ச்சல் ஏற்படும். அதோடு இருமளும் ஏற்படும். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். 

கேள்வி : இலங்கையில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் இனங்காணப்பட்டுள்ளார்களா? 

பதில் : இல்லை. இலங்கையில் இது வரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் இனங்காணப்படவில்லை. எனினும் தொற்றுக்கு உள்ளாகியிருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படும் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் இருவர் சீனாவில் கல்விக்காக சென்ற இலங்கை பெண்களாவர். ஏனைய இருவரும் சீன சுற்றுலா பயணிகளாவர். 

கேள்வி : இதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் ? 

பதில் : இந்த வைரஸ் இனங்காணப்பட்டுள்ள நாடுகளிலிருந்து குறிப்பான சீனா போன்ற நாடுகளில் இருந்து வருகை தருபவர்கள் தொடர்பில் சோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு விமானங்களிலேயே இந்த வைரஸ் தொடர்பில் தெளிவுபடுத்தல் செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனவே விமான பயணிக்கும் பயணியொருவர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றார் என்று சந்தேகிக்கப்பட்டால் அவரை விமான நிலையத்திலிருந்து உடனே வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அத்தோடு வைரஸ் இனங்காணப்பட்ட நாடுகளிலிருந்து வருகை தந்தவர்களுக்கு இரு வாரங்களுக்குள் அதிக காய்ச்சல் , இருமள் என்பன ஏற்பட்டால் அவ்வாறானவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் தாம் எந்த பிரதேசத்திலிருந்து வருகை தருகின்றோம் என்ற விபரங்களை வழங்க வேண்டும். குறிப்பாக இவ்வாறானவர்களை பரிசோதிக்கும் வைத்தியர்கள் சிகிச்சையளிப்பதோடு மாத்திரமின்றி அவர்களது தகவல்களைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். எனினும் இது தொடர்பில் யாரும் அச்சமடையத் தேவையில்லை. 

தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக இனங்காணப்படுபவர்கள் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் இடங்களில் அநாவசியமாக நடமாடுவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கைகளை சவர்க்காரமிட்டு கழுவ வேண்டும். இருமள் அல்லது தும்மல் ஏற்படும் போது கைக்குட்டை போன்றவற்றை பாவிப்பது அத்தியாவசியமாகும். வாய் மற்றும் மூக்கை மூடிய வகையிலிருப்பதும் பாதுகாப்பானதாகும். 

கேள்வி : விமான நிலையம் மாத்திரமின்றி துறைமுகத்தினூடாகவும் சீனப்பிரஜைகள் உள்ளிட்டோர் நாட்டுக்கு வருகை தருகின்றனர். துறைமுகத்தில் எவ்வாறான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன? 

பதில் : விமான நிலையத்தில் ஸ்கேனர்ஸ் இயந்திரத்தின் மூலம் பிரயாணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். துறைமுகத்துடன் ஒப்பிடும் போது விமான நிலைத்துக்கு ஊடான போக்குவரத்தே அதிகமாகக் காணப்படுகிறது.

எனவே துறைமுகத்திலுள்ள சுகாதார பிரிவினருக்கு அங்கு வருகை தருபவர்களை இலகுவாக பரிசோதனை செய்து கொள்ள முடியும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.