ராகுல் மற்றும் ஸ்ரேஸ் அய்யரின் அதிரடியான இணைப்பாட்டத்தினால் நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு -20 போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணியானது நியூஸிலாந்துடன் 5 இருபதுக்கு - 20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் கடந்த வெள்ளிக்கிழமை அக்லாந்தில் ஆரம்பமானது இருபதுக்கு -20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றது.

இந் நிலையில் இன்றைய தினம் அக்லாந்தில் ஆரம்பான இருபதுக்கு - 20 தொடரின் இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து, 132 ஓட்டங்களை குவித்தது.

133 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மா கடந்த போட்டியைப் போன்றே இந்த ஆட்டத்திலும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது 8 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

ரோகித் சர்மாவின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய விராட் கோலியும் 11 ஓட்டத்துடன் டீம் சவுதியின் பந்து வீச்சில் ரோஸ் டெய்லரிடம் பிடிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.

இதன் பின்னர் 3 ஆவது விக்கெட்டுக்காக கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேஸ் அய்யர் ஆகியோர் அதிரடியான இணைப்பாட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 16 ஓவர்களின் நிறைவில்  2 விக்கெட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களை குவித்தது.

இந் நிலையில் அதிரடியாக ஆடிவந்த ஸ்ரேஸ் அய்யர் 16.3 ஆவது ஓவரில் மொத்தமாக 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கலாக 44 ஓட்டங்களை பெற்று இஷ் சோதியின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக சிவம் டூப் களமிறங்கி துடுப்பெடுத்தாட இந்திய அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. இறுதி வரை ஆட்டமிழக்காதிருந்த ராகுல் 50 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களுடனும், சிவம் டூப் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் இந்தியா - 2:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.