கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற சந்கேதத்தின் போரில் நேற்று மாலை அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் உட்பட நான்கு பேர் கொரோனா வைரஸின் தாக்கத்துக்குள்ளாகவில்லை என முதலாம் கட்ட வைத்திய பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளை வைத்திய ஆராச்சிய நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நான்கு பேரின் குருதி மாதிரியில் கொரோனா வைரஸ் தொற்று இல்லையென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனினும் முதலாவது கட்ட வைத்திய பரிசோதனைகளை உறுதிப்படுத்த இரண்டாம் கட்ட வைத்தியப் பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும், அந்த அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சீனப் பெண் ஒருவரும் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவருமே நேற்று மாலை இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப் படுத்தப்படும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் இருவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை,  கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக தெரிவித்து ஐ.டி.எச் வைத்தியசாலையில் நேற்று (25) இரு பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சீனாவில் கல்வி கற்ற நிலையில் இலங்கை திரும்பிய வைத்திய பீட மாணவியொருவரும் சுற்றுலா மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த சீன பெண்ணும் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆண் ஒருவரும் சீன நாட்டு பெண் ஒருவருமே இன்று இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று என சந்தேகிக்கப்படும் நிலையில் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை மூன்று பெண்கள் உட்பட 4 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண் சீனப்பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்காக விசேட சிகிச்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி.எச். வைத்தியசாலையில், சிகிச்சை வழங்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றவில்லை என முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.