கரைச்சி பிரதேச சபையினரால் எங்குமில்லாத அளவில் அதிகரித்த வீதமான பத்து வீதத்தில் அறவிப்படுகின்ற ஆதன வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து  கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற போராட்டம்  கரைச்சி பிரதேச சபையின் எழுத்து மூலமான உறுதிப்பாட்டையடுத்து கைவிடப்பட்டுள்ளது.

 ஏழு நாட்களுக்குள் பொருத்தமானதும், ஏற்புடையதுமான தீர்வினை வழங்குவதாக எழுத்து மூலமான உறுதிப்பாட்டை கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் சி. சிவபாலனால் வழங்கியதனை தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.

முன்னதாக கரைச்சி பிரதேச சபையின்  சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் 11 பேரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினருமாக 12 உறுப்பினர்கள்  அவசரமான விசேட சபை அமர்வினை கூட்டுமாறு கோரி கடிதம் வழங்கியிருந்தார்கள். அதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை விசேட சபை அமர்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த குமாரசாமி மகேந்திரனுக்கு  முகவரியிடப்பட்டு உப தவிசாளரினால்  இன்று( 25)  மாலை ஏழு மணியளவில்  கடிதம் வழங்கப்பட்டது. 

கடிதத்தினை ஏற்றுக்கொண்ட அவருக்கு உப தவிசாளர், ஆளும் தரப்பு பிரதேச சபை உறுப்பினர் க.குமாரசிங்கம், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் தலைவர் செயலாளர்  ஆகியோர் குடிப்பதற்கு நீர் வழங்கி போராட்டத்தை நிறைவுக்குக் கொண்டுவந்தனர்.