புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஸ்ஸலாவ பகுதியில் இன்று  25.01.2020 மாலை திடீர் தீ விபத்தில் அச்சகம் ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச பொது மக்கள், இளைஞர்கள் ஆகியோர் இணைந்து ஏனைய கடைகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

தீ ஏற்பட்ட காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் புஸ்ஸலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதியில் தீயணைக்கும் வாகனம் இல்லை என்பதால் கண்டி பகுதியிலிருந்தே தீயணைக்கும் வாகனம் வர வேண்டும். எனினும் மக்கள் தகவல் கொடுத்தும் தீயணைக்கும் வாகனம் கடைசி நிமிடம் வரை வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கருத்திற் கொண்டு இப்பிரதேசத்திற்கான தீயணைக்கும் வாகனம் ஒன்றை வழங்க வேண்டும் என மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.