முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையின் வாயிலை மறித்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு நகர அபிவிருத்தி ஒன்றியம் வர்த்தக சங்கத்தினர், பேருந்து சங்கத்தினர், பொது அமைப்புக்கள்,பொதுசந்தை சஙகத்தினர்,கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து அறிவிப்பினை விடுத்துள்ளார்கள்.

இது தொடர்பிலான ஊடக சந்திப்பு ஒன்றினை முல்லைத்தீவு நகர வர்த்தக சங்க கட்டத்தில் 25.01.2020 இன்று நடத்தியுள்ளார்கள்.

இதன்போது சமூக சேவையாளர் பீற்றர் இளஞ்செழியன், முல்லைத்தீவு வர்த்தக சங்க தலைவர் மரியாம் பிள்ளை அந்தோனிப்பிள்ளை, முல்லைத்தீவு வர்த்தக சங்க செயலாளர் முத்துராசா சிவனேசராசா ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.

கருத்து தெரிவித்த பீற்றர் இளஞ்செழியன் முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையானது நூறு ஆண்டு வரலாற்றினை கொண்ட வைத்தியசாலை மூன்று வைத்தியர்கள் கட்டாயம் இருக்கவேண்டிய ஒரு வைத்தியசாலை 2018 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் அங்கு நிதந்தர வைத்தியர் இல்லாத நிலை தொடர்ந்தும் நிலவி வருகின்றது.

கடந்த டிசம்பர் மாதம் முன்னா பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி டிலைக்சன் அவர்களினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்மாறி வேறொரு மாவட்டத்திற்கு சொல்லவுள்ள வைத்தியருடன் பேசி மூன்று மாத காலத்திற்;கு ஒரு வைத்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த வைத்தியரை அதன் பின்னர் வந்த பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் எஸ்.சுகந்தன் எந்த காரணமும் இன்றி அந்த வைத்தியரை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 03.01.2020 அன்று தொடக்கம் இந்த வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாத நிலைகாணப்படுகின்றது இதன் பின்னர் பதிவு செய்யப்படாத வைத்தியர் ஒருவர் ஒரு நிறுவனத்தின் நிதி உதவியுடன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு வைத்தியருக்கு கீழோயே பணிபுரிய வேண்டும்.

இந்நிலையில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டபோது தீர்வின்றி தொடர்ந்து செல்கின்றது.

இது விடையம் குறித்து கடந்த 23 ஆம் திகதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு மக்கள் அமைப்புக்களை அழைத்து பேச்சு நடத்தியுள்ளார் ஆனால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இன்னிலையில் இந்த வைத்தியசாலைக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை தொடக்கம் கொக்குளாய் பகுதிகளில் இருந்து அதிகளவான நோயாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையாக முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை காணப்படுகின்றது இவ்வாறு மக்களின் சுமைகளை இரட்டிப்பாக்கும் நோக்கில் மக்களை மாவட்ட வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு தீர்வு கிடைக்காத நிலை தொடர்ந்தும் இருப்பதன் காரணத்தினால் முல்லைத்தீவு நகர அபிவிருத்தி ஒன்றியம் வர்த்தக சங்கத்தினர்,பேருந்து சங்கத்தினர்,பொது அமைப்புக்கள்,பொதுசந்தை சஙகத்தினர்,கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து 29 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்க முன்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.