சீனாவின் வுஹான் நகரத்தில் கொடிய கொரோனா வைரஸ்  தாக்கம் மையம் கொண்டுள்ளமையால் இலங்கை பிரஜைகளை இலங்கைக்கு அழைத்து வர  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பீஜிங் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரத்தில் ஹூபே மாகாணத்திலுள்ள 32 இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்ற அல்லது இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தோற்றத்தின் மையம் என நம்பப்படும் 11 மில்லியன் மக்கள் வசிக்கும் சீனாவின் வுஹான் நகர் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரசினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்திருப்பதோடு உலகளாவிய ரீதியில் வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை சுமார் 1,300 ஆக உயர்ந்திருக்கும் நிலையில் நோய் பரவலை தடுப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முன்னர் அறியப்படாத இந்த வைரஸ் கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் மத்திய நகரான வுஹானில் உள்ள சட்டவிரோதமான காட்டு விலங்குகளை விற்கும் சந்தையில் இருந்து பரவியதாக நம்பப்படுகிறது.

கொங்கொங், மக்காவு,தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா,தாய்வான்,சவுதி அரேபியா,பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா இந்தியா,நேபாளம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்றிய சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் உலகெங்கும் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது.