(வாஸ் கூஞ்ஞ)

தலைமன்னார் கடல் பிராந்தியத்தில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இந்திய மீனவருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

சடலம் அடையாளம் காணுமுகமாக மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

தலைமன்னார்  மீனவர்கள்  மீன்பிடிக்காக கடலுக்குச் சென்றபோது தலைமன்னாரை அண்டிய தலைமன்னாருக்கும் தனிஷ்கோடிக்கும் இடையில் காணப்படும்  முதலாவது மண் திட்டியில் குறித்த சடலத்தைக் கண்டு மீனவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து தலைமன்னார் பொலிசார் கடற்படையினரின் உதவியுடன் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டெடுத்து மன்னார் பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காகவும் சடலத்தை அடையாளம் காணுமுகமாகவும் ஒப்படைத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலத்தின் கையொன்றில் எச்.ரூபினா என பச்சை குத்தப்பட்டிருப்பதுடன் கறுப்பு நிற காற்சட்டை அணிந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் குறித்த சடலமானது காணாமல் போன இந்திய மீனவர்களில் ஒருவரின் சடலமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதால் யாழ் இந்தியத் தூதரம் ஊடாக தகவல் வழங்கி சடலத்தை அடையாளம் கண்டு கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.