ஹைதராபாத் அருகே அமைந்துள்ள முதியோர் காப்பகத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டு 80 பேர் சித்திரவதைக்குட்படுத்திய சம்பவம்  ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் அருகே கீசரா பகுதியில் ‘மமதா’ என்ற பெயரில் முதியோர் காப்பகம் இயங்கி வந்தது.

இங்கு ஏராளமான முதியவர்கள் தங்கி இருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் அங்கிருந்த சிலர் வெளியேறிவிட்டனர். 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட முதியவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் விடுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்நிலையில், விசாரணை நடத்துவதற்காக பொலிஸார் காப்பகத்திற்கு சென்றபோது அங்கு முதியவர்களை பூட்டி சிறை வைத்திருப்பதும், அவர்களை சங்கிலியால் கட்டி கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது.

குறித்த காப்பகத்தில் வைத்திய சிகிச்சை என்ற பெயரில் முதியவர்களை சங்கிலிகளால் கட்டி சித்திரவதை செய்ததும் அம்பலமானது. இந்த காப்பகத்தில் முதியவர்களை பராமரிப்பதற்காக மாதம் 10 ஆயிரம் ரூபா கட்டணம் வசூலித்து வந்துள்ளனர்.

ஆனால் அவர்களை உரிய முறையில் பராமரிக்காமல் சித்ரவதை செய்துள்ளனர். இதையடுத்து காப்பகத்தில் இருந்து 80-க்கும் மேற்பட்ட முதியவர்களை பொலிஸார் மீட்டனர்.

இதில் 5 பேரை அவர்களது குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர். 21 மூதாட்டிகள் மற்றும் 56 ஆண் முதியவர்கள் வேறு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை திரும்ப அழைத்து செல்லாத குடும்பத்தினர் மீது மூத்தகுடி மக்கள் நலச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.