தென்னாபிரிக்க ரசிகர் ஒருவருக்கு எதிராக தகாத வார்த்தையை பயன்படுத்தியமைக்காக இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென்ஸ்டோக்ஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

இங்கிலாந்து தென்னாபிரிக்க அணிகளிற்கு இடையிலான நான்காவது டெஸ்டின் முதல்நாளான நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 107 ஓட்டங்களிற்கு விக்கெட்கள் எதனையும் இழக்காமல் ஒரு தருணத்திலிருந்த போதிலும் பின்னர் அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை இழந்தது.

பென்ஸ்டோக்ஸ் இரண்டுஓட்டங்களை பெற்றிருந்தவேளை ஸ்லிப்பில் கட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆட்டமிழந்து திரும்பிக்கொண்டிருந்தவேளை பென்ஸ்டோக்ஸ் தென்னாபிரிக்க ரசிகர் ஒருவரை நோக்கி சைகை செய்ததுடன் தகாத வார்த்தை பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளார்.

மைதானத்திற்குள் சொல்வதை வெளியில் வந்து சொல் பார்ப்போம் என பென்ஸ்டோக்ஸ் அச்சுறுத்தியுள்ளார்.

பென்ஸ்டோக்ஸ் தெரிவித்ததை பதிவு செய்தஒளிபரப்பாளர்கள் பின்னர் அதனை வெளியிட்டுள்ளனர்.

இது தற்போது சமூக ஊடகங்களில் பரவிவருகின்றது.

இந்த சம்பவத்திற்காக பென் ஸ்டோக்ஸ்   மன்னிப்பு கோரியுள்ளார்.

நான் ஆட்டமிழந்து செல்லும்வேளை தெரிவித்ததாக ஒலிபரப்பான வார்த்தை பிரயோகங்களிற்காக மன்னிப்பு கேட்கின்றேன் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

நான் அவ்வாறு நடந்துகொண்டிருக்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.நான் ஆடுகளத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த வேளை தொடர்ச்சியாக நிந்திக்கப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் நடந்துகொண்ட விதம் தொழில்சார் தன்மை வாய்ந்தது இல்லை,நான் பயன்படுத்திய வார்த்தைகளிற்காக நேர்மையாக மன்னிப்பை கோருகின்றேன், குறிப்பாக உலகம் முழுவதும்  தொலைக்காட்சியில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த இளம்ரசிகர்களிடம்  மன்னிப்பு கோருகின்றேன் எனஅவர் தெரிவித்துள்ளார்.

இந்த தொடர் முழுவதும் இருநாடுகளினதும் ரசிகர்களும் மிகச்சிறப்பான ஆதரவை வெளியிட்டுள்ளனர்,ஒரு சம்பவம், நாங்கள் வெல்வதில் உறுதியாகவுள்ள இந்த தொடரிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் பென்ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.