சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா,நேபாளம்,மலேசியா ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.

இந்தியா

இந்தியாவில் நான்கு நகரங்களில்  சீனாவில் இருந்து திரும்பி வந்த 11 பேர் கொரோனா வைரஸின் அறிகுறிகளைகளுடன்  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஏழு பேரும், மும்பையில் இரண்டு பேரும், பெங்களூரில் ஒருவரும் மற்றும் ஐதராபாத்தில் ஒருவரும் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

நேபாளம்

அண்மையில் சீன நகரமான உஹானில் இருந்து திரும்பிய  மாணவர் ஒருவர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை  அடையாளம் கண்டதையடுத்து நேபாளம்  நாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்றை வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியதாக நேபாளம் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உஹானில் பி.எச்.டி பட்டப்படிப்பு படித்து வரும் 31 வயதுடைய மாணவர், ஜனவரி 5 ஆம் திகதி சீன நகரத்திலிருந்து திரும்பியிருந்தார். அவர் சுவாசக் கோளாறினால் வைத்தியசாலைக்குச்  சென்று ஜனவரி 13 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியா

மலேசியாவில் மூன்று பேருக்கு இங்கு உஹான் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

ஜொகூர் பாரு வழியாக மலேசியாவிற்குள் நுழைந்த மூன்று சீன குடிமக்களாகிய உஹானைச் சேர்ந்த 66 வயதான ஒருவரின் மனைவி மற்றும் பேரக்குழந்தைகள் ஆகிய மூவருக்கே குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த மூன்று நோயாளிகளுக்கும் சிலாங்கூரில் உள்ள சுங்கை புலோ வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் தற்போது ஒரு வைத்தியர் உட்பட 41 உயிரிழந்துள்ளதுடன் 1,300 பேர்  உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அத்தோடு, கொங்கொங், மக்காவு,தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா,தாய்வான்,சவுதி அரேபியா,பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.