ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றி குறித்து முன்கூட்டியே ஆரூடம் கூறியவர்களில் அமரர் ரஞ்சித் டி சொய்சா முதன்மையானவர் என்றே கூற வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

காலஞ்சென்ற சகோதர  பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தொடர்பிலான அனுதாபப் பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில்  இடம்பெற்றபோது அதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

இன்றைய எமது மக்கள் விரும்பிய ஆட்சி உருவாகுவதற்கு அயராது உழைத்திருந்தவர்களில் அமரர் ரஞ்சித் டி சொய்சா முக்கியமானவர் என்றே குறிப்பிட வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றி குறித்து முன்கூட்டியே ஆரூடம் கூறியவர்களில் அமரர் ரஞ்சித் டி சொய்சா முதன்மையானவர் என்றே கூற வேண்டும்.

2010ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு இரண்டு தடவைகள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இக்காலகட்டங்களில் அவர் பாராளுமன்றத்தில் இளைஞர் விவகாரம்,  விளையாட்டு கலை மற்றும் மரபுரிமைகள் தொடர்பிலான கண்காணிப்பு செயற்குழுவினதும்,  பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினது ஆலோசனை செயற்குழுவினதும் உறுப்பினராகவும் செயலாற்றியிருந்தார்.

இரத்தினபுரி மாவட்ட மக்களது அன்பை வென்ற ஒரு செயற்பாட்டு வீரராக அவர் திகழ்ந்துள்ளார் என்பதற்கு இன்றும் அம்மக்கள் அவர்மீது கொண்டுள்ள பற்றே ஆதாரமாக இருக்கின்றது.

அரசியல் கலந்துரையாடல்களாக இருந்தாலும், அரசியல் வாத விவாதங்களாக இருந்தாலும், சமூக மட்டத்துப் பிரச்சினைகளாக இருந்தாலும் அவற்றில் எல்லாம் கலந்து கொண்டு தனது திறமையை சான்றுபட நிரூபித்துள்ள பெருமைக்குரியவராக அன்னார் திகழ்ந்தார்.

அந்தவகையில், அன்னாரது இழப்பால் துயர் கொண்டுள்ள அனைவருடனும் ஈ.பி.டி.பி. கட்சியின் சார்பாகவும் எமது மக்களின் சார்பாகவும் துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன் என்று தெரிவித்தார்