(செ.தேன்மொழி)

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான கோப் குழுவின் அறிக்கையும் , ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கையும் தற்போது வெளிவந்துள்ளதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி பிணைமுறி மோசடிக்கு எதிராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழக்கு தாக்கல் செய்யவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்ததார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 

மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் கோப்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும் முன்னெடுத்த விசாரணைகளின் அறிக்கை தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. இதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இரசாங்கத்திற்கே அதிகாரம் இருக்கின்றது. இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே நிதி அமைச்சுக்கும் பொறுப்பாக இருப்பதினால் அவரே வாழக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

கடந்தகாலங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் சிறந்த நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை வெற்றியடைச் செய்திருந்தனர்.

மக்களின் எதிர்பார்பை நிறைவேற்றும் தலைவர் என்றால் அவர் இந்த மோசடிதாரர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இதேவேளை 2015 ஆம் ஆண்டில் மாத்திரமே பிணைமுறி மோசடி இடம்பெற்றுள்ளதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்கு முன்னரும் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றுள்ளமைக்கான ஆதாரங்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன.

இவற்றை அடிப்படையாக கொண்டு பார்த்தால் இந்த மோசடிகளுடன் இரு குடும்பத்தினரே அங்கம் வகித்துள்ளனர் என்று தோன்றுகின்றது. 

அஜித் நிவாட் கப்ரால் 2006 ஆம் ஆண்டு மத்தியவங்கி ஆளுனராக இருந்த போதும் பிணைமுறி மோசடி இடம்பெற்றுள்ளது. இதன்போதும் இந்த மோசடியுடன் அஜித் நிவாட் கப்ராலின் மற்றும் அர்ஜூனா மகேந்திரனின் குடும்பத்தினர் பங்குக் கொண்டுள்ளதுடன் , 2015 ஆம் ஆண்டு அர்ஜூனா மகேந்திரன் ஆளுனராக இருந்த போது இடம்பெற்ற மோசடிகளிலும் இந்த இரண்டு குடும்பத்தினரும் பங்குக் கொண்டுள்ளனர். 

இவர்களது இந்த செயற்பாட்டுக்கு பலமான அரசியல் பாதுகாப்பொன்று இருந்திருக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நாட்டை ஆட்சிக்குட்படுத்தி வரும் இரு கட்சிகளுமே பொது மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதில் ஒன்றிணைந்தே செயற்பட்டுள்ளன என அவர் இதன்போது தெரிவித்தார்.