(நா.தனுஜா)

இலங்கையில் பல்லாயிரக்கணக்கானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டமைக்கான ஒரு அடையாளமாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு காணப்படுகின்ற அதேவேளை, இதுகுறித்து உண்மையும், நீதியும் நிலைநாட்டப்படாமல் அதிலிருந்து அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வது ஒருபோதும் சாத்தியமானதல்ல.

எனவே இதுகுறித்த முறையான விசாரணைகளை முன்னெடுத்து, பொறுப்பாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தி நீதியை நிலைநாட்டுவதற்கு இலங்கை முன்வரவேண்டும் என்று ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டு 10 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கிறது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டு இன்றுடன் பத்து வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், அதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் காணொளியொன்றைப் பதிவேற்றம் செய்திருப்பதுடன், பின்வருமாறு பதிவிட்டிருக்கிறது.

'இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டு இன்றுடன் ஒரு தசாப்தகாலம் ஆகியிருக்கிறது.

இத்தருணத்தில் அவரது மனைவியான சந்தியா எக்னெலிகொட பிரகீத் எக்னெலிகொடவையும், உண்மை மற்றும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான தனது போராட்டத்தையும் நினைவுகூருகின்றார்.

இலங்கையில் பல்லாயிரக்கணக்கானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டமைக்கான ஒரு அடையாளமாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு இருக்கின்றது. இதுகுறித்து உண்மையும், நீதியும் நிலைநாட்டப்படாமல் அதிலிருந்து அடுத்தகட்டத்தை நோக்கி நகர்தல், நிச்சயத்தன்மை என்பவை ஒருபோதும் சாத்தியமல்ல.

எனவே இவ்விடயம் தொடர்பில் நியாயமான விசாரணையை முன்னெடுத்து பொறுப்பாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துவதன் ஊடாக நீதி நிலைநாட்டப்படுவதை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும்.'

அதேவேளை சர்வதேச மன்னிப்புச் சபையினால் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் காணொளியில் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

'பிரகீத், 2010 ஜனவரி 24 ஆம் திகதியே நான் உங்களை இறுதியாகக் கண்டேன். அப்போது நீங்கள் அணிந்திருந்த ஆடை கூட எனக்கு நன்கு நினைவிலிருக்கிறது.

மூத்த மகனின் வெள்ளைநிற மேற்சட்டையும், பிரவுன்நிற காற்சட்டையும் அணிந்திருந்தீர்கள். சில வேலைகள் இருப்பதாகவும், அவற்றை முடித்துவிட்டு வீடு திரும்புவதாகவும் கூறிச்சென்றீர்கள்.

பாற்சோறு உண்ணாத 10 சிங்கள, தமிழ் புத்தாண்டுகளும், 10 பிறந்தநாட்களும் கடந்துவிட்டன. இவ்வருடத்துடன் உங்களுக்கு 60 வயதாகிறது.

உங்களால் நினைத்துக்கூடப் பார்க்க இயலாதளவிற்கு எமது பிள்ளைகள் இருவரும் வளர்ந்துவிட்டார்கள்.

அவர்கள் உங்களை விடவும் உயரம் என்பதுடன், உங்களைப் போன்றே சிறந்த தோற்றத்துடன் இருக்கிறார்கள். 'அவர்கள்' எமது வாய்களை மூடுவதற்கு முயன்றார்கள். உங்களை எமது நினைவுகளிலிருந்து அழிப்பதற்கு முயன்றார்கள்.

ஆனால் அவ்வாறு செய்யமுடியுமா? நாங்கள் உங்களை தினமும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் உங்களுக்காகத் தினமும் போராடுகின்றோம். உங்களை நேசிப்பதாக உங்களிடம் கூறுவதற்காக இரண்டாவது மகன் நீங்கள் வீடு திரும்பும்வரை காத்துக்கொண்டிருக்கிறான்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.