தடுப்பு முகாம்களில் வைத்து இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் மற்றும் வீடுகளில் வைத்து பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகளையும்,வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளைகளையுமே நாங்கள் கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

உயிரிழந்த உறவுகளைக் கேட்டு நாங்கள் போராடவில்லை.உயிரோடு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைக் கேட்டே நாங்கள் போராடுகின்றோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை(24) காலை 11 மணியளவில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டது எமது பிள்ளைகளும் உறவுகளுமே. ஆனால் தற்போது புதிய அரசாங்கத்தின்  ஜனாதிபதி  காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இல்லை என்றால் அவர்கள் எங்கே என்பது அவருக்குத்தான் தெரியும்.அவர்களுக்கு என்ன நடந்தது? என்ன செய்தார்கள் என்பது அவருக்கே தெரியும். 

அவருடைய காலத்திலேயே உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.மன்னார் தீவைப் பொறுத்த வகையில் இராணுவத் தின் கட்டுப்பாட்டிலிருந்த பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம்களில் வைத்து இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் மற்றும் வீடுகளில் வைத்து பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகளை யும்,வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளைகளையுமே நாங்கள் கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?அவர்கள் எங்கு இருக்கின்றார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கேட்டே நாங்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். அரசாங்கம் இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும் .அவருடைய ஆட்சிக்காலத்திலே பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். பிடித்துச் செல்லப்பட்டனர்.
இவர் கூறிய படியாலேயே அனைத்துமே நடந்துள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்பி இருக்கின்ற நிலையில் ஜனாதிபதி அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரும் இல்லை என்று கூறியுள்ளார்.

பிடித்துச் செல்லப்பட்ட பிள்ளைகள் எங்கே என்று இவருக்குத் தெரியும்.இவருடைய ஆட்சியிலேயே நடந்துள்ளது. எங்களு டைய பிள்ளைகள், உறவுகள் எங்கே என்று தான் நாங்கள் கேட்கின்றோம்.எமது பிள்ளைகள் என்ன நிலையிலிருந்தாலும் பரவாக இல்லை.

நீங்கள் பிடித்துக்கொண்டு போன எங்கள் பிள்ளைகளும்,உறவுகளும் உங்களிடம் இருக்கின்றார்கள் எனக் கூறியதன் நம்பிக்கையிலேயே நாங்கள் இருக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என்ன நிலையிலிருந்தாலும் எங்களிடம் ஒப்படையுங்கள். தற்போது கூட புலனாய்வுத் துறையினரால்(சி.ஐ.டி) எங்களுக்குப் பிரச்சினையாகவே உள்ளது. காலை நேரத்தில் வீடுகளுக்கு வருகின்றனர்.

அவர்களின் முகங்களிலே நாங்கள் முழிக்க வேண்டியதாக இருக்கின்றது. இன்று எங்கே போகின்றீர்கள்? என்ன கலந்துரையாடல் உள்ளது?எப்போது ஜெனிவாவிற்குப் போகின்றீர்கள் எனக் கேள்வி கேட்கின்றனர்.இவர்கள் ஏன் எங்களை விசாரணை செய்ய வேண்டும்?.இவர்கள் எங்களை விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

எங்களை அவர்கள் விசாரணை செய்கின்றார்கள் என்றால் நாங்கள் அவர்களிடம் கேட்கின்றோம் காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய பிள்ளைகளை மீண்டும் உங்களிடம் கொண்டு வந்து தந்தீர்கள் என்றால் நாங்கள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்கின்றோம்?,கூட்டம் போடுகின்றோம்,ஜெனிவா செல்லப் போகின்றோம். நாங்கள் எங்கும் போக வேண்டிய அவசியம் இல்லை.

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளையே நாங்கள் தேடிக்கொண்டு நிற்கின்றோம். அதனை ஏன் இவர்கள் சிந்திக்கின்றார்கள் இல்லை.தற்போதைய ஜனாதிபதி உங்களுக்கு உதவி செய்வதாக இருந்தால் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் அவருடைய காலத்திலேயே காணாமல் ஆக்கப்பட்டனர்.

எனவே காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை அவரே கொண்டு வந்து தர வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.