யுத்தம், கலவரங்கள், சுனாமி மற்றும் சூறாவளி எனத்தொடரும் அழிவுகளின் பின்னர் அபிவிருத்தி என்ற பெயரில் அரசுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வீதிகள், பாலங்கள் கட்டிடங்கள் உள்ளிட்ட கண்களுக்குப் புலப்படும் பெரும் பெரும் பெளதீகக் கட்டுமானங்களில் கவனம் செலுத்தி பல்லாயிரம் கோடி பெருமதியான பொருளாதாரங்களையும் வளங்களையும் கொட்டி பல திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றார்கள். 

இவற்றை யாருக்காக செய்கின்றார்களோ அந்த மக்களால் அதன் உச்சகட்ட பயனை அடைந்துகொள்ள முடியாத நிலையே பெரும்பாலும் காணக் கூடியதாகவுள்ளது. இந்நிலைக்கு அடிப்படைக்காரணங்களாக கண்களுக்குப் புலப்படும் பெளதீக விடயங்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவங்களைப் போன்று நமது இருப்பிற்கும் அசைவியக்கத்திற்கும் மூலநாடியாக இருக்கும் அல்லது குறித்த அபிவிருத்திகளின் உச்சகட்ட பயனை நுகர்வதற்கான கண்களுக்குப் புலப்படாத உணர்வுகள் உள்ளிட்ட உளவியல் சார் அம்சங்களுக்கும் உள்ளிட்ட உளநல கட்டுமான அபிவித்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் கவனயீனமாக கடந்துபோக முனையும் செயற்பாடேயாகும்.

இலங்கையை பொருத்தமட்டில் சுமார் முப்பது வருட யுத்தம் மற்றும் கடல் சீற்றம் உள்ளிட்ட அழிவுகளைச்சந்தித்து இன்னும் மீண்டு எழ முடியாமல் தத்தளிக்கும் நிலையில் பெரும்பாலான மக்கள் இருக்கின்றார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில் கடந்த கால யுத்தத்தின் தாக்கத்தையும் அதன் வடுக்களையும் இங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்வில் காணமுடிகிறது. 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், அனாதையாக்கப்பட்ட பிள்ளைகள், அங்கவீனமாக்கப்பட்டவர்கள், பரம்பரை பரம்பரையாக உழைத்து சேர்த்து வைத்த தம் சொத்து சுகங்களையும் உயிர்களையும் யுத்தத்தின் கோர பசிக்கு இரையாக்கியவர்கள் என தொடரும் பட்டியலில் இன்றும் பெரும்பாலான மக்கள் மனக்கவலையுடனே வாழ்கிறார்கள். 

அவர்களின் மனங்களில் துன்பம், கவலை, கோபம், சந்தேகம், சோர்வு, ஏக்கம், நம்பிக்கையின்மை என மறையான உணர்வுகளையே பெரும்பாலும் காணக்கூடியதாகவுள்ளன. அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் உளவியல் மேம்பாடு சார்ந்த பல செயற்பாடுகளை செய்து வந்தாலும் அவற்றின் பலன்கள் பாரியளவு காணக்கூடியதாக இல்லை. இதன் காரணமாகவே அரசாலும் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்படும் பாரியளவான பெளதீக அபிவிருத்திகளின் நோக்கங்கள் நிறைவேறாமல் விரயமாகின்றன. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து சுமார் பத்து ஆண்டுகள் கடந்த நிலையில், மக்களின் மனநிலையிலான முன்னேற்றதில் படிப்படியான முன்னேற்றம் காணப்பட்டாலும் முழுமையாக அடையமுடியவில்லை என்பதிலிருந்து அம்மக்கள் இன்னும் மன வடுக்களுடனே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது தெளிவாகின்றது. 

எனவே மக்கள் மத்தியில் ஆரோக்கியமான உடல், உள நிலைகளை மேம்படுத்தும் திட்டங்கள் பரவலாக நடைமுறைப் படுத்தப்படவேண்டும். இலங்கையில் முறையாக உளவளத்துறையில் கல்வி கற்று களத்தில் செயற்படுவோரின் வீதமானது சேவையினை நாடுவோருடன் ஒப்பிடும் போது மிக குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கு பல காரணங்களை குறிப்பிடலாம், இளைஞர்களிடையே இத் துறை தொடர்பாக காணப்படும் தெளிவின்மை மற்றும் ஆர்வமின்மை, இலங்கையில் இத் துறைக்கு காணப்படும் அங்கீகாரத்தின் தன்மை, மொழி ரீதியான பிரச்சினைகள், ஈடுபட்டுள்ள சேவை வழங்குவோரின் தகுதி மற்றும் அவர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டிய பயிற்சிகளின் இடைவெளி என பல காரணங்களை குறிப்பிடலாம். ஆகவே அரசாங்கம் இத் துறையில் கல்வி கற்க எமது இளம் சமூகத்தினை ஊக்குவிக்கவும் அது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்தவும் முன் வரவேண்டும்.  

மேலும் உளவளத்துறைச் சேவைகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தினை அரசு இன்னும் கிராம மட்டங்களில் அதிகரிக்க வேண்டும். அதேபோல் மக்களிடமும் உளவளத்துறைச் சேவைகள் சம்பந்தமான விழிப்புணர்வினை அதிகரித்து இச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வழிகளை இலகுபடுத்த வேண்டும். வடுக்கள் மற்றும் வலிகளிலிருந்து மக்களை மீட்டெடுத்து உடல் உள ஆரோக்கியத்துடனான மக்களை நிலைபேறுடைய அபிவித்திகளூடாக முன்கொண்டு செல்வதன் மூலமாகவே நாட்டை வீண்விரயமற்ற வளர்ச்சிப் பாதையில் வெற்றிகரமாக பயணிக்கச்செய்ய முடியும்.

இக்கட்டுரையானது குடும்ப புனர்வாழ்வு நிலையம் (FRC) மற்றும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் உளநல வாழ்வினை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளும் உளநல விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-எம்.ஏ.எம்.முர்ஷித்