முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனுக்கு எதிராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர்.

சாளம்பைகுளம் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டு விவகாரத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவரது கருத்து மடத்தனமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது  தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பிரதேச சபைக்கு முன்பாக ஒன்று கூடிய உறுப்பினர்கள் அமைச்சருக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரே காரணம். குறித்த குப்பை மேடு இருப்பது தெரிந்தும் அதற்கு அருகே காணிகளை வழங்கி அந்த மக்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளியவர் அவரே என்பதைக் கூறிக்கொள்கிறோம். குப்பை மேடு வந்த பிறகு தான் குடியேற்றங்களை மேற்கொண்டிருக் கிறார்கள்.

குப்பை மேட்டிற்கு அருகில் குடியேற்றத்தைச் செய்த அந்த மடத்தனமான வார்த்தை அவருக்கே தான் பொருந்தும். எனவே அவரது கருத்தினை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதல் வந்தது குப்பை மேடா குடியேற்றமா, குப்பைகளை எங்கே போடுவது, குப்பைமேட்டிற்கு அருகில் குடியேற்றம் செய்தது யார் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.