(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, கடற்படை புலனாய்வாளர்கள் 13 பேருக்கு, அவர்களது சட்டத்தரணிகள் முன்வைத்த அடிப்படை ஆட்சேபத்தினை நிராகரித்து இன்று சிறப்பு ட்ரயல் அட் பார் நீதிமன்றம்  குற்றப் பத்திரிகையை கையளித்தது. 

எனினும் 14 பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட மன்றில் ஆஜராகாத நிலையில், அவருக்கு மீள மன்றில் ஆஜராவதற்கான அறிவித்தல் அனுப்பட்டது.

இந்த கடத்தல், காணாமல் அககல் குறித்த வழக்கு விசாரணைகள் முதன் முறையாக  பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னத்தின் தலைமையின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளான  அமல் ராஜகருணா, நவரத்ன மாரசிங்க ஆகியோர் உள்ளடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது 14 பிரதிவாதிகளில் அறிவித்தல் பிரகாரம் 13 பேரே ஆஜராகியிருந்ததுடன், வசந்த கரன்னாகொட ஆஜராகியிருக்கவில்லை. அவருக்கு அறிவித்தல் கையளிக்கும்  பொறுப்பு வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் உரிய முறையில் அறிவித்தல் கையளிக்கப்பட்டதா என்பது உறுதி செய்யப்படாத நிலையில் அவருக்கு மீள அறிவித்தல் பிறப்பிக்க  சிறப்பு ட்ரயல் அட் பார் நீதிமன்றம் இன்று நடவடிக்கை எடுத்தது.

எவ்வாறாயினும் இந்த வழக்கு தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த மூவர் கொண்ட நீதிபதிகள் குழு, 1 முதல் 13 வரையிலான சந்தேக நபர்களை தலா 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை,  25 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்தது.  சரீரப் பிணையலர்களில் ஒருவர்  பிரதிவாதியின் மனைவியாகவும் மற்றையவர் நெருங்கிய உறவினராகவும் இருக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம் மனைவியை உறுதி செய்ய திருமன பதிவுப் பத்திரத்தை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

அதனைவிட வெளிநாட்டுப் பயணத் தடை வித்த நீதிமன்றம் பிரதிவாதிகள் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறு சி.ஐ.டி.யில் கையொப்பமிட வேண்டும் எனவும் அறிவித்தது. இதனையடுத்து இது குறித்த அடுத்த கட்ட வழக்கு விசரணையை நீதிமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.