தகவல் தொழில்­நுட்ப வளர்ச்­சி­யோடு இணைந்த இணை­ய­த­ளங்­களின் வளர்ச்சி, ஒன்லைன் நூல்­விற்­பனை, இலத்­திரன் நூல்­களின் விற்­பனை வளர்ச்சி என்­பன கார­ண­மாக, புத்­தகக் கடை­களின் தொகை பெரு­வீழ்ச்சி கண்டு வரு­கின்­றது. இது மேலை­நா­டு­களில் காணப்­படும் நிலை­மை­யா­யினும் இலங்கை போன்ற வளர்­முக நாடு­க­ளிலும் இதே போக்கு எதிர்­கா­லத்தில் தென்­ப­டலாம் போலத் தெரி­கின்­றது. அதன் கார­ண­மாக எதிர்­காலம் பற்­றிய உணர்­வுடன் செயற்­பட புத்­தகக் கடை­களின் உல­க­ளா­விய போக்­கு­களை அறிந்­து­கொள்­வது பயன்­தரும்.

இங்­கி­லாந்தில் 2009 இல் 1289 புத்­தகக் கடைகள் இருந்­தன; இவை 2011 இல் 1094 ஆக வீழ்ச்சியுற்­றுள்­ளன. 2018 இல் மட்டும் 65 கடைகள் மூடப்­பட்­டன. புத்­தக வர்த்­த­க­சங்­கத்­த­லை­வரின் கருத்­தின்­படி, இது­வரை இல்­லாத அள­வுக்கு இலத்­திரன் நூல்­களும் இணை­ய­ த­ளங்­களும் புத்­த­க­நி­லை­யங்­க­ளுக்குக் கடு­மை­யான போட்­டியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அச்­சி­டப்­பட்ட நூல்­களின் விற்­பனை தற்­போது  வீழ்ச்சி கண்­டுள்­ளது.

அதே­வே­ளையில் இலத்­திரன் நூல்­களின் விற்­பனை அதி­க­ரித்து வரு­கின்­றது. பிரித்­தா­னி­யாவில் அவ்­ விற்­பனை அண்­மையில் 360% ஆல் அதி­க­ரித்­துள்­ளது.

மேலைநாடு­களில் புத்­த­க­நி­லை­யங்கள் (கடைகள்) ‘கலா­சா­ர­மை­யங்­க­ளாகக்’ கரு­தப்­ப­டு­கின்­றன. புத்­தக நிலை­யங்கள் எழுத்­த­றிவை வளர்க்­கின்­றன; சமு­தா­யத்தில் சிறந்த தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன; சொந்­த­மாக நூல்­களை வைத்­தி­ருக்கும் பழக்­கத்தை வளர்க்­கின்­றன. அவை பலரும் சந்­திக்கும் இடங்கள்; நூல் வெளி­யீட்டு நிகழ்ச்­சி­களும் நடை­பெ­று­வ­துண்டு. பிரித்­தா­னிய சமூக வாழ்க்­கையில் அவற்­றுக்கு ஒரு முக்­கிய இட­முண்டு என்­பதால், அவற்றைப் பாது­காக்க வலு­வான நட­வ­டிக்­கைகள் தேவை என்று பிரித்­தா­னிய நூல் விற்­ப­னை­யாளர் சங்கம் கரு­து­கின்­றது.

புத்­தக நிலை­யங்­க­ளுக்கு ஆத­ர­வா­ன­வர்­களின் கருத்­தின்­படி, புத்­தக நிலை­யங்கள் படிப்­ப­டி­யாக மறை­வ­தோடு ஆயி­ரக்­க­ணக்­கான உள்­ளூ­ராட்சி நூல­கங்­களும் மூடப்­பட்டு முழு நாடுமே ஒரு புத்­தக வனாந்­த­ர­மாகி விடும்.

இங்­கி­லாந்தின் தேசிய எழுத்­த­றிவை நம்­பிக்கை பொறுப்பு நிலை­யத்தின் தலைவி ஜீடித்தின் கருத்­தின்­படி அந்­நாட்டில் ஆறில் ஒரு­வ­ருக்கு எழுத்­த­றிவுப் பிரச்­சினை உண்டு. இதனால் அவ­ரு­டைய தொழில், உடல்­நலம் மற்றும் முழு வாழ்க்­கை­யுமே பாதிக்­கப்­ப­டலாம். எனவே, வாசிப்பை மேம்­ப­டுத்­தக்­கூ­டிய புத்­தக நிலை­யங்­களின் வீழ்ச்சி கவ­லைக்­கு­ரி­யது. மேலும் புத்­த­கக்­க­டைகள், நூல­கங்கள் என்­பவை வீழ்ச்­சி­ய­டை­யும்­போது மக்கள் மத்­தியில் சமூக குற்­றங்­களும் அதி­க­ரிக்­கலாம் என பலரும் எச்­ச­ரிக்கை செய்­துள்­ளனர்.

இத்­தாலி, சீனா

இத்­தா­லியில் புத்­தக நிலை­யங்கள் துரி­த­ க­தியில் மூடப்­பட்டு வரு­வதால் அந்­நாட்டில் ஒரு கலா­சார நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. கடந்த 5 ஆண்­டு­களில் அங்கு 2300 புத்­தக நிலை­யங்கள் மூடப்­பட்­டன. அர­சாங்கம் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்கத் தவ­றி­விட்­டது என்று நூல் விற்­ப­னை­யா­ளர்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர். ஒரு உத்­தேசச் சட்­டத்­தின்­படி இத்­தா­லியில் வாசிப்புக் கலா­சா­ரத்தை மேம்­ப­டுத்தி சிறிய விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கு பல சலு­கை­களை வழங்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. ஆனால் இச்­சட்டம் நிறை­வேற்­றப்­ப­டா­த­தை­யிட்டு கண்­டனம் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அறு­பது ஆண்டு காலத்­திற்கு மேலாக ரோம் தலை­ந­கரில் இயங்­கி­வந்த ஆங்­கி­ல­மொழி நூல­க­மொன்று மூடப்­ப­ட­வுள்­ளது. இதற்குக் காரணம் பல்­வேறு இலத்­திரன் வச­தி­களில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­ற­மே­யாகும். கடந்த தசாப்­தத்தில் ரோம் நகரில் மட்டும் 200 புத்­தக விற்­பனை நிலை­யங்கள் மூடப்­பட்­டுள்­ளன.

சீனாவில் இயங்­கி­வந்த மிகவும் பிர­சித்தி பெற்ற புத்­தக விற்­பனை நிலை­ய­மொன்று (Book Worm) அண்­மையில் மூடப்­பட்­டது. 2002 ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட இந்த நிலையம் ஆரம்­பத்தில் ஒரு சிறிய நூல் நிலை­ய­மாக இருந்­தது. பல நக­ரங்­களில் கிளை­களும் தொடங்­கப்­பட்­டன. எவ்­வா­றா­யினும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான சீனர்­களின் வாசிப்பு பழக்­கத்­தினை ஊக்­கு­வித்த இந்த நிலை­யமும் மூடப்­பட்­டது.

ஹொங்­கொங்கில் சீனா­வு­ட­னான பிரச்­சி­னை­களின் கார­ண­மாக பல நூல் பதிப்­ப­கங்கள் மூடப்­பட்டு வரு­கின்­றன. 5 பதிப்­ப­கங்கள் மறைந்த 3 ஆண்­டு­களின் பின்னர் ஹொங்­கொங்­கிலும் சீனாவின் நிர்ப்­பந்­தங்கள் கார­ண­மாக மக்கள் புத்­த­க­நி­லையம் என்ற பிர­சித்தி பெற்ற புத்­த­க­ நி­லை­யமும் மூடப்­பட்­டது. சீன அர­சாங்கம் ஹொங்­கொங்­கிற்கு வழங்­கிய ‘ஒரு நாடு, இரு அமைப்­பு­கள்­’ என்ற விசேட அந்­தஸ்து தற்­போது கைவி­டப்­ப­டு­வ­தாகத் தெரி­கின்­றது. தொழில்­நுட்ப வளர்ச்­சிக்கு அப்பால் ஹொங்­கொங்கில் அர­சியல் பிரச்­சி­னையும் இணைந்து புத்­தக நிலை­யங்­களின் வீழ்ச்­சிக்கு கார­ண­மா­யிற்று.

வாசிப்பின் வீழ்ச்சி

புத்­த­க­நி­லை­யங்கள், நூல­கங்­களின் தொகையில் ஏற்­படும் வீழ்ச்சி வாசிப்புப் பழக்­கத்தின் வீழ்ச்­சியின் குறி­காட்­டி­யா­கவும் அடை­யாளம் காணப்­ப­டு­கின்­றது. வாசிப்புப் பழக்கம் பற்­றிய அண்­மைக்­கால ஆய்­வுகள் பெரும்­பாலும் அதற்­கான கார­ணங்கள், அப்­ப­ழக்­கத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­ மு­றைகள் பற்­றி­ய­ன­வாக உள்­ளன. ஆனால் இவற்­றையும் மக்கள் வாசிக்­கா­விட்டால் என்ன செய்­வது எனக் கேட்போர் உள்­ளனர். திட்­ட­மிடத் தவ­று­ப­வர்கள் தவறு செய்யத் திட்­ட­மி­டு­கின்­றார்கள் என்­பது போல் வாசிப்புப் பழக்­கத்தை இழக்கும் சமூகம் சிந்­திக்­கவும் தவ­று­கின்­றது என்று ஒரு பேரா­சி­ரியர் (M.ஸ்டீபன்ஸ்) கூறினார்.

இப்­பே­ரா­சி­ரியர் சஞ்­சி­கை­யி­யலில் நிபுணர் சமூக நிகழ்­வு­களில் அவர் சந்­திக்கும் பல­ரிடம் தாங்கள் அண்­மையில் வாசித்த நூல் என்ன? என்று கேட்­பது பலரை சங்­க­டத்­துக்­குள்­ளாக்­கு­வ­தாகக் கூறு­கின்றார். மருத்­து­வரைக் காணக்­காத்­தி­ருப்போர், விமானப் பய­ணிகள் என அனை­வ­ருமே நூல், சஞ்­சிகை வாசிப்­பதை விடுத்து வேறு பணி­களில் (தொலைக்­காட்சி, கைபேசி, வீடியோ விளை­யாட்டு) என்­ப­வற்றில் ஈடு­பட்­டி­ருப்­ப­தாக அவர் அவ­தா­னித்­துள்ளார். வாசிப்பு எவ்­வாறு கலா­சார வளர்ச்­சியில் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது என உறு­தி­யாக நிறு­வப்­பட்­டுள்ள சந்­தர்ப்­பத்தில் வாசிப்புப் பழக்கம் மறைந்து செல்­வ­தாக அவர் கவலை தெரி­விக்­கின்றார்.

நூல்­நி­லை­யங்­களின் தொகையின் வீழ்ச்­சி­யுடன் மேலை­நா­டு­களில் (உதா­ர­ண­மாக, பிரித்­தா­னியா, அமெ­ரிக்கா)  நூல் நிலை­யங்­களைப் பயன்­ப­டுத்­துவோர் தொகையில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி இன்று ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பிரித்­தா­னிய வளர்ந்­தோரைப் பொறுத்­த­வ­ரையில், கடந்த பத்து ஆண்­டு­களில் இவ்­வீழ்ச்சி 30 சத­வீ­த­மாக உள்­ளது (கலா­சார, ஊடக அமைச்சின் அறிக்கை) 16–24 வயது இளை­ஞர்­களில் இவ்­வீழ்ச்­சி­யா­னது அண்­மைக்­கா­லத்தில் (2015இல்)  50 சத­வீ­த­மாக உள்­ளது. இவ்­வா­றான வீழ்ச்­சிக்­கான கார­ணங்கள் ‘நேர­மின்மை’, ‘வேறு இடங்­களில் நூல்கள் கிடைப்­பது’, ‘இலத்­திரன் நூல்கள் என இவ்­வ­றிக்கை கூறு­கின்­றது.

BBC வழங்கும் தக­வல்­க­ளின்­படி, 2010 இன் பின் 343 நூல­கங்கள் மூடப்­பட்­டன; இவ்­வாண்டில் மேலும் 111 நூல­கங்கள் மூடப்­ப­ட­வுள்­ளன. ஏனைய 224 நூல­கங்கள் வெளி­யா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளன.

மொத்­தத்தில் நூல­கங்­களும் புத்­தகக் கடை­களும் வீழ்ச்­சி­ய­டை­வது என்­பது நவீன யுகத்தில் பெரிதும் வருந்­தத்­தக்­க­தொரு விடயம். பல்­வ­கைப்­பட்ட தகவல் சாத­னங்கள், ஆடம்­பர வாழ்க்கை, கம்­பெனிக் கலா­சா­ரத்தின் எழுச்சி, நவீன தொழில்­நுட்­பத்தின் வளர்ச்சி போன்ற கார­ணிகள் நூலகப் பயன்­பாட்­டையும் நூற் பயன்­பாட்­டையும் கட்­டுப்­ப­டுத்­து­கின்­றன. அறிவின் மீது நூல­கங்கள் கொண்­டி­ருந்த ஏக­போக உரிமை தற்­போது சிதை­வுற்று வரு­கின்­றது. எண்மத் (Digital) தொழில்நுட்பமானது, அறிவின் மீது நூலகங்கள் கொண்டிருந்த அதிகார உரிமையைப் பறித்துவிட்டதாகக் கூறுப்படுகின்றது.

இன்று சர்வதேச நிறுவனங்களும் (யுனெஸ்கோ) தேசிய அரசாங்கங்களும் வாசிப்பை மேம்படுத்தல், நூலகப் பயன்பாட்டை அதிகரித்தல் தொடர்பாகப் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. யுனெஸ்கோவின் பின்வரும் செய்தி இதனை உணர்த்துகின்றது.

“மிக அத்­தி­யா­வ­சி­ய­மான மனித சுதந்­தி­ரங்­களின் குறி­காட்­டி­யாக நூல்கள் விளங்­கு­கின்­றன; பிர­தா­ன­மாக, கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­தி­ரமும் பிர­சு­ரிக்கும் சுதந்­தி­ரமும். இச்­சு­தந்­தி­ரங்கள் பல சவால்­களை எதிர்­நோக்­கு­கின்­றன. பாட­சாலைகள் தாக்­கப்­ப­டு­கின்­றன. நூல்கள் அழிக்­கப்­ப­டு­கின்­றன. உலகளாவிய ரீதியில் எமது கடமை இச்­சு­தந்­தி­ரங்­களைப் பாது­காத்து, எழுத்­தறிவின்­மைக்கும் வறு­மைக்கும் எதி­ராகப் போராடுவது; வாசிப்பு, எழுத்துத்திறன்களை மேம்படுத்துவது’’

பேராசிரியர் சோ. சந்திரசேகரம்

– யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம்