மெல்போர்னில் இடம்பெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ் கியாங் வாங்கிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெறியேறியுள்ளார்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் இன்றைய தினம் இடம்பெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3 ஆம் சுற்றில் 38 வயதுடைய அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையும், டென்னிஸ் தரவரிசையில் 9 ஆவது இடத்திலும் உள்ள செரீனா வில்லியம்ஸும், 29 ஆவது இடத்தில் உள்ள 28 வயதான சீனாவின் கியாங் வாங்கும் மோதினர்.

சுமார் 2 மணி நேரமும் 41 விநாடிகளும் நீடித்த இந்த ஆட்டத்தன் இறுதியில் கியாங் வாங் 6-4, 6-7 (2), 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் செரீனா வில்லியம்ஸ் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பினை இழந்து அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2 ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் வன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 7-6 (7-4), 6-1 என்ற நேர் செட் கணக்கில் பெடெரிகோ டெல்போனிசை (அர்ஜென்டினா) தோற்கடித்து 3 ஆவது சுற்றை எட்டினார். நடால் அடுத்து சக நாட்டவர் காரெனோ பஸ்தாவை சந்திக்கிறார்.

4 ஆம் நிலை வீரரான டேனில் மெட்விடேவ் (ரஷ்யா), தகுதி நிலை வீரர் ஸ்பெயினின் பெட்ரோ மார்ட்டினசை 7-5, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 3 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

மற்ற ஆட்டங்களில் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மன்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), நிக் கைர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), கரென் கச்சனோவ் (ரஷியா) உள்ளிட்டோர் வெற்றி கண்டனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2 ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) அஜ்லா டாம்ஜனவோவிச்சை 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி சாய்த்தார். இந்த ஆட்டம் 2 மணி 22 நிமிடங்கள் நீடித்தது.

இன்னொரு ஆட்டத்தில் 2 ஆம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் லாரா சிஜ்மன்டை வெளியேற்றினார். 

சிமோனா ஹாலெப் (ருமேனியா), பென்சிச் (சுவிட்சர்லாந்து), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.