வவுனியா மடுக்கந்த தேசிய பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி மடுக்கந்தையை சேர்ந்த  சிங்கள மக்கள் ஒன்றிணைந்து வவுனியா கல்வித்திணைக்களத்தின் முன்பாக ஏ9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 9.30 மணிக்கு கல்வித்திணைக்களத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென ஏ9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது பாடசாலைக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்கும் பட்சத்திலேயே அங்கிருந்து செல்வோம் என கோசங்களை எழுப்பினர்.

இதனால் ஏ9 வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்ட நிலையில் போக்குவரத்து பொலிஸார் மாற்று வழிகளினூடாக போக்குவரத்தைச் சீர்செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகள் வவுனியா தெற்கு வலயக் கல்விப்ணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணனை ஆர்ப்பாட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டுக் குறித்த மக்களுடன் கலந்துரையாடினார். 

இதன்போது தமது பாடசாலையில் 750 இற்கும் அதிகமான மாணவர்கள் கற்பதாகவும் உயர்தரத்திற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையுள்ள நிலையில் அவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் தெரிவித்ததுடன் ஏனைய வகுப்புகளுக்கும் மாணவர்களை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

இதன்போது வலயக்கல்விப்பணிப்பாளர் இரண்டு வாரத்தில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு ஆவன செய்வதாகத் தெரிவித்த நிலையில் அவர்கள் அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. 

எனினும் எழுத்து மூலமாக தமக்கு உறுதிப்பாடு தரவேண்டும் எனக் கேட்டதற்கு அமைய வலயக்கல்விப் பணிப்பாளரினால் எழுத்து மூலமாக இரண்டு வாரத்தில் தேசிய பாடசாலைக்கான ஆசிரியர்கள் நியமிப்பதாகவும் மற்றும் மாகாண பாடசாலைகளிலிருந்து தற்காலிகமாகவேனும் உயர்தர மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்களை நியமிப்பதாகத் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்த கலைந்து சென்றிருந்தனர்.