ஈரானின் வான்வெளியில் பறக்கும் விமான பாதுகாப்புக்கு தெஹ்ரான் உத்தரவாதம் அளித்துள்ளதாக மொஸ்கோவில் உள்ள ரஷ்யாவின் மத்திய விமான போக்குவரத்து நிறுவனமான 'Rosaviatsia' இன்றைய தினம் தெரிவித்துள்ளது.

ஈரானின் தற்செயலான செயற்பாட்டினால் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனிய பயணிகள் விமான சோகத்தையடுத்து, ஈரானின் பாதுகாப்பு விதிமுறைகள் சீரமைக்கப்பட்டு, பொருத்தமான சரியான செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதனால் அனைத்து விமான பணியாளர்களும் ஈரானின் வான்வெளியூடான விமான போக்குவரத்து நடவடிக்கையை ஆரம்பிக்கலாம் என ஈரானிய விமான போக்குவரத்து அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக Rosaviatsia சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த அறிக்கையின்படி ஈரானிய வான்வெளி மற்றும் விமான நிலையங்களின் விமானப் பாதுகாப்பு நிலைமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ரஷ்ய விமான நிறுவனங்கள் உட்பட ஏனைய நாட்டு விமான நிறுவனங்களும் தமது வான் வெளியை வழமைபோலவே பயன்படுத்த முடியும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் இமாம் கோமெய்னி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஜனவரி 8 ஆம் திகதி உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் விமானம் கியேவ் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது. 

மொத்தம் 167 பயணிகளும், 9 பணியாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர். அவர்களில் ஈரான், கனடா, உக்ரேன், ஆப்கானிஸ்தான், ஜேர்மனி, சுவீடன் மற்றும் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்தோர் அடங்கியிருந்தனர்.

விபத்துக்குள்ளான இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஈரானிய இராணுவம் தற்செயலாக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஒப்புக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.