சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இலகுவான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

சிம்பாப்வேக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது சிம்பாப்வேயுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இத் தொடரில் ஹரேயில் ஆரம்பான முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸிக்காக 358 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அஞ்சலோ மெத்தியூஸின் இரட்டை சதத்துடன் மொத்தமாக 9 விக்கெட்டுக்களை இழந்து 515 ஓட்டங்களை குவித்து டிக்ளே செய்தது.

இதன் மூலம் 157 ஓட்டங்களினால் பின் தங்கியருந்த சிம்பாப்வே அணி நேற்றைய தினமே தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.

அதன்படி நேற்யை போட்டியின் நான்காம் நாள் முடிவில் சிம்பாப்வே அணி‍ 17 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்களை பெற்றது.

இந் நிலையில் போட்டியின் ஐந்தாம் நாளான இன்றைய தினம் சிம்பாப்வே அணியினர் இலங்கை அணியின் பந்து வீச்சுகளுக்கு தாக்குப் பிடித்தாடி தொடரை சமப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் இலங்கை அணியின் சிறப்பான பந்து வீச்சுக் காரணமாக சிம்பாப்வே அணியினர் ஐந்தாம் நாள் முடிவின் இறுதிப் பொழுதில் 92 ஓவர்களை எதிர்கொண்டு சகல விக்கெட்டுக்களையும் இழந்து  170 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

சிம்பாப்வே அணி சார்பில் பிரண்டன் டெய்லர் 38 ஓட்டங்களையும், அணித் தலைவர் சோன் வில்லியம்ஸ் 39 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுக்களையும், லஹரு குமார 3 விக்கெட்டுக்களையும், லசித் எம்புலுதெனிய 2 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக வெறும் 14 ஓட்டத்தை மாத்திரம் சிம்பாப்வே அணியினரால் நிர்ணயிக்க முடிந்தது.

14 ஓட்டம் என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக ஓசத பெர்னாண்டோ மற்றும் திமுத் கருணாரத்ன களமிறங்கி 3 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு வெற்றியிலக்கை அடைந்தனர்.