(எம்.மனோசித்ரா)

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து போட்டியிடுவது தொடர்பில் ஆலோசிக்கவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள தலைமைத்துவ பிரச்சினை காரணமாகவே இவ்வாறு மாற்று தீர்மானம் எடுக்கலாமா என்று சிந்தித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து போட்டியிடுவது தொடர்பில் ஆலோசிக்கவுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுவில் ஆலோசிக்கப்படவுள்ளது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தனது உத்தியோக பூர்வ டுவிட்டல் பக்கத்தில் மேற்கூறிய விடயம் தொடர்பில் பதிவிட்டுள்ளார். 

தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவது தொடர்பில் ஆராயவுள்ளது. 

நாடளாவிய ரீதியிலுள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலும் சொந்த சின்னத்தில் தனித்து போட்டியிடுவது பற்றி எதிர்வரும் திங்கட்கிழமை நுவரெலியாவில் இடம்பெறவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. 

பொதுத் தேர்தலில் முற்போக்கான மற்றும் தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது பற்றியும் அரசியல் குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படும் என்று அந்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து முற்போக்கு கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்னணிடம் வினவிய போது , 

ஐக்கிய தேசிய கட்சிக்குள் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை தலை தூக்கியுள்ளது. எனவே தான் தனித்து போட்டியிடுதல் சாத்தியப்படுமா என்ற மாற்று வழி குறித்து சிந்திக்கப்பட்டுள்ளது. எனினும் அது தீர்க்கமான முடிவல்ல. திங்கட்கிழமை நடைபெறவுள்ள அரசியல் குழு கூட்டத்தில் கலந்தாலோசித்த பின்னரே உத்தியோகபூர்வமாக தீர்மானங்களை அறிவிக்க முடியுமென அவர் தெரிவித்தார்.