Published by R. Kalaichelvan on 2020-01-23 19:05:55
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நல்லாட்சியில் தலைமைகளுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட நபர்களுக்கிடையே காணப்பட்ட முரண்பாடுகளும் அதிகார மோதலுமே காரணமாக அமைந்தது.

ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் - சஜித் தரப்பினருக்கு இடையில் கொள்கை ரீதியில் மாறுபாடுகள் இல்லாத நிலையில் ''கோத்தா ஜனாதிபதி - சஜித் பிரதமர்" என்ற பிரசாரத்தை முன்னெடுப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் தரப்பினர் கூறுகின்றனர்.
கொள்கை அடிப்படையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பயணிக்க தயார் எனவும் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் தரப்பு இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
அதில் கலந்திகொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான அஜித் பெரேரா, விஜயபால ஹெட்டியாராச்சி மற்றும் நளின் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியினர், பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றிபெற செய்து அவரை பிரதமராக்கும் சகல முயற்சிகளையும் முன்னெடுப்போம். அதற்கான பிரச்சாரத்தை முன்னெடுப்போம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி உறுப்பினர்கள் , அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி செலுத்தும் வகையில் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்பில் சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தின் போது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்படி அவர் தேர்தலில் வெற்றிப் பெற்று பிரதமராகுவார். ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷவும் பிரதமராக சஜித் பிரேமதாசவும் செயற்படும் ஆட்சியை முன்னெடுக்க நாம் தயராக உள்ளோம் என தெரிவித்தனர்.