(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளை என்னுடன் தொடர்புபடுத்தி தேர்தலில் இனவாத அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுக்க சிலர் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அத்துடன் என்மீது சுமத்தப்படுகின்ற இந்த குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக மிக விரைவில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும்  விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை கொடுப்பதற்கும், வாக்குமூலங்களை வழங்கவும் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

உயிர்த் ஞாயிறு தாக்குதல் முஸ்லிம் பெயர்தாங்கிகளால் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் அவர்களை உண்மையான  இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. இது வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளி என்பதில் சந்தேகமே இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை  சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.