ஊழலுக்கெதிரான தரப்படுத்தல் சுட்டியில் 89ஆவது இடத்தில் இலங்கை

By Daya

23 Jan, 2020 | 03:22 PM
image

ஊழலுக்கெதிரான உலகளாவிய கூட்டமைப்பான ட்ரான்ஸ்பேரன்ஸ்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் ஊழலுக்கெதிரான தரப்படுத்தல் சுட்டியின் பிரகாரம், இலங்கை 2019 ஆம் ஆண்டில் எவ்விதமான முன்னேற்றத்தையும் அடையவில்லை.

2019ஆம் ஆண்டு 38 புள்ளிகளைப் பெற்று முன்னைய ஆண்டின் அதே நிலையையே தக்கவைத்துள்ளது. புள்ளிகளின் அடிப்படையில் 0 புள்ளி (அதிக ஊழல் நிறைந்த) நாடாகவும் 100 புள்ளி (ஊழலற்ற மிகவும் தூய்மையான) நாடு என்ற அடிப்படையில் நாடுகள் தரப்படுத்தப்படுகின்றது.

தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையானது பூட்டான் (68) மற்றும் இந்தியா (41) ஆகிய நாடுகளிலும் பார்க்கப் பின் தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இலங்கையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 38 புள்ளியானது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சராசரியான 45 புள்ளிகளையும் விட பின்தங்கிய நிலையிலுள்ளது.

அதேவேளை, 180 நாடுகளில் இலங்கை 89ஆவது இடத்திலும் தெற்காசியாவில் 3ஆவது இடத்திலும் உள்ளது. ஊழலுக்கு எதிரான சூழலை உருவாக்குவதில் இலங்கை எவ்விதமான வளர்ச்சியையும் காட்டவில்லை. இலங்கை ஊழல் சுட்டியானது 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 36 –38 புள்ளிகளையே பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான ஊழல் சுட்டியானது 2018 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 89 ஆம் நிலையிலிருந்து பின்னடைவு பெற்று 93 ஆம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர மேலும் கூறும் போது “தற்போது நிலவுகின்ற வாதப்பொருளான அரசியல்வாதிகளின் சொத்துக்கள் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனம், தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி என்பன தொடர்பாக எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஆகவே புதிய அரசாங்கம் மக்கள் மத்தியில் நன்மதிப்பைக் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் இதுவாகும் எனத் தெரிவித்தார்”.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்பின் தவிசாளர் டெலியா பெரெய்ரா ருபியோவின் உலகளாவிய அறிக்கையில் “அரசின் மீதான ஏமாற்றம் மற்றும் அரச நிறுவனங்கள் மீதான அவநம்பிக்கை என்பவற்றை அகற்ற பரந்தளவு நேர்மைத்தன்மையான அரசியலை உருவாக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கான பாரிய நிதியளித்தல் மற்றும் அரசமுறைமை மீதான தேவையற்ற செல்வாக்குக் காரணமாக ஏற்படும் ஊழலை ஒழிப்பதற்கு அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்”.

ஊழலை குறைப்பதற்கும் அரசின் மீது நம்பிக்கையை உருவாக்குவதற்கும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சகல அரசாங்கங்களிடமும் பின்வரும் சிபாரிசுகளை முன்வைக்கிறது:

அரசுகள் அதிகாரப் பரவலாக்கத்தை மேற்கொள்ளுவதுடன் அதனிடையே அதிகாரச் சமநிலையைப் பேணுதலை மீள் உறுதிப்படுத்தல்

பக்கச்கார்பான நடத்துகை மற்றும் பொதுச் சேவைக்கான அரச வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீடு என்பன தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் அரசியல் ரீதியிலான அதிகாரத்திலிருந்து நடுநிலையாக செயற்படுவதையும் உத்தரவாதப்படுத்தல்.

அரசின் மீதான அதிகூடிய செல்வாக்கு மற்றும் அரசியலுக்கான நிதியுதவி என்பவற்றை கட்டுப்படுத்து தல், வெளிப்படையான அர்த்தமுள்ள தீர்மானம் எடுக்கும் நடைமுறைகளைப் பின்பற்றுதல்

பிரஜைகள், செயற்பாட்டாளர்கள், குற்றத்தை வெளிப்படுத்துவோர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான வலுவூட்டல்

2019 ஆண்டின் ஊழல் சுட்டி 180 நாடுகளில் 13 வகையான மதிப்பாய்வுகளின் அடிப்படையில் கணனியூடாக செய்யப்படும் நிபுணத்துவ அறிக்கையாகும். இதில் டென்மார்க் மற்றும் நியூசிலாந்து 87 புள்ளிகளைப் பெற்று முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன் சோமாலியா 9 புள்ளிகளைப் பெற்று 180ஆவது இடத்திலுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right