மெல்பேர்னில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் நேற்று இடம்பெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2 ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் தட்சுமா இட்டோவை சுலபமாக தோற்கடித்தார்.

இதேவேளை 6 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரருக்கும் 2 ஆவது சுற்றில் 6-1, 6-4, 6-1 என் நேர் செட்டில் செர்பிய வீரர் பிலிப் கிராஜினோவிச்சை தோற்கடித்தார்.

இதனால் 3 ஆவது சுற்றை அடைந்துள்ள பெடரர் அவுஸ்திரேலிய பகிங்க டென்னில் தொடரில் பெற்ற 99 ஆவது வெற்றி இதுவாகும். 

குரோஷிய வீரர் மரின் சிலிச் தன்னை எதிர்த்தாடிய பிரான்ஸ் வீர் பெனோய்ட் பேருடன் 5 செட் வரை மல்லுகட்ட வேண்டி இருந்தது. 3 மணி 33 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் சிலிச் 6-2, 6-7(6-8), 3-6, 6-1, 7-6 (10-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

தரவரிசையில் 8 ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் மாட்டியோ பெரேட்டினி 100 ஆம் நிலை வீரர் டெனிஸ் சான்ட்கிரினிடம் (அமெரிக்கா) கடும் சவாலுக்கு மத்தியில் 7-6 (9-7), 6-4, 4-6, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். 

இதே போல் 20 ஆம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவும் (பல்கேரியா) அமெரிக்காவின் டொமி போலுக்கு எதிராக 5 செட் வரை போராடி தோல்வியடைந்தார்.

சிட்சிபாஸ் (கிரீஸ்), மிலோஸ் ராவ்னிக் (கனடா), பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), பாபியோ போக்னினி (இத்தாலி) உள்ளிட்டோர் 3 ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திவிஜ் ஷரண், நியூசிலாந்தின் ஆர்டெம் சிடாக் கூட்டணி 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் காரெனோ பஸ்தா (ஸ்பெயின்) - ஜோ சோசா (போர்ச்சுகல்) இணையை தோற்கடித்தது.

அதே சமயம் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜப்பானின் யாசுடகா உச்சியாமா இணை முதல் சுற்றுடன் நடையை கட்டியது. இவர்களை அமெரிக்க சகோதரர்கள் போப் பிரையன், மைக் பிரையன் ஜோடியினர் 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் வன்’ வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் ஆஷ்லிங் பார்ட்டி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சுலோவேனியாவின் போலோனா ஹெர்காக்கை தோற்கடித்து தொடர்ந்து 4 ஆவது முறையாக 3 ஆவது சுற்றுக்குள் நுழைந்தார். 

அவுஸ்திரேலிய பிகிரங்க தொடரில் அவுஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் 3 ஆவது சுற்றை எட்டுவது 1988 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் சீனாவின் சாய்சாய் ஜெங்கை தோற்கடித்தார். ஒசாகா 3 ஆவது சுற்றில் 15 வயது இளம் புயல் அமெரிக்காவின் கோரி காப்புடன் மோத உள்ளார். 

இந்த தொடருடன் டென்னிசுக்கு முழுக்கு போடும் முன்னாள் ‘நம்பர் வன்’ வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி( டென்மார்க்) 2-வது சுற்றில் 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் டயானா யாஸ்ட்ரிம்ஸ்காவை (உக்ரைன்) வென்றார்.

24 ஆவது கிராண்ட்ஸ்லாம் மகுடத்துக்கு குறி வைத்துள்ள முன்னாள் ‘நம்பர் வன்’ வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் தமரா ஜிடான்செக்கை (சுலோவேனியா) தோற்கடித்தார். செரீனா 3 ஆவது சுற்றில் சீனாவின் குயாங் வாங்குடன் மோதுகிறார். 

பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஜூலியா ஜார்ஜஸ் (ஜெர்மனி), மேடிசன் கீஸ் (அமெரிக்கா) ஆகியோரும் 2 ஆவது தடையை வெற்றிகரமாக கடந்தமை குறிப்பிடத்தக்கது.