(நா.தனுஜா)

புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் கூட இன்னமும் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி, அதன் அதிகாரத்தை இழக்கச்செய்வதற்காக மைத்திரிபால சிறிசேன நடத்திய பலியெடுப்பாகவே உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல்களைக் குறிப்பிட முடியும்.

ஆனால் அவர் தற்போதும் 8 கோடி ரூபா பெறுமதியான இல்லத்தில் சுகபோகங்களை அனுபவித்தவாறு இருக்கிறார். அவர்மீது புதிய அரசாங்கம் ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போதைய ஆளுந்தரப்பினர் தேர்தலின் போது மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்கள். அவற்றில் ஜனாதிபதியாகப் பதவியேற்று இருவார காலத்திற்குள் பிணைமுறி மோசடி மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் சூத்திரதாரிகளை நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்பதும் முக்கிய வாக்குறுதியாக அமைந்திருந்தது.

ஆனால் பதவியேற்று இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் கூட இன்னமும் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

உண்மையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி மைத்திரிபால சிறிசேனவே ஆவார்.

அவரே கடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளின் பிரதானியாகவும் இருந்தார்.தேசிய பாதுகாப்புச்சபையைக் கூட்டுகின்ற அதிகாரம் அவர்வசமே காணப்பட்டது.

ஆனாலும் அவர் அதனைச் சரியாகச் செய்யவில்லை. அதுமாத்திரமன்றி பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப்பெற்ற போதிலும், முப்படைகளின் பிரதானி என்ற வகையில் அதனைத் தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவில்லை.

மாறாக நாட்டின் மீது பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் காணப்பட்ட நிலையிலும், அவர் விடுமுறையை அனுபவிக்க சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

தாக்குதல் இடம்பெற்ற தகவல் கிடைத்ததும், அவர் நினைத்திருந்தால் மூன்று மணித்தியாலங்களுக்குள் நாடு திரும்பியிருக்க முடியும். ஆனாலும் அவர் அவ்வாறு செய்யவில்லை. அதற்குப் பதிலாக சிங்கப்பூரிலிருந்து இலங்கை வரும் விமானநிலையத்தில் இருக்கை காணப்படவில்லை என்று காரணம் கூறினார்.

ஆனால் அவர் கூறியது பொய் என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது.

எனவே இத்தகைய மோசமான அனர்த்தமொன்று இடம்பெறும் தருணத்தில் நாட்டின் ஜனாதிபதி வேண்டுமென்றே பிறிதொரு நாட்டில் இருந்திருக்கிறார்.

பயங்கரவாதத் தாக்குதலில் பல உயிர்கள் பலியாகி, பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் சிதறிய பின்னரும் அவர் நாடு திரும்பவில்லை.

ஆகவே நல்லாட்சி அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி, அதன் அதிகாரத்தை இழக்கச்செய்வதற்காக மைத்திரிபால சிறிசேன நடத்திய பலியெடுப்பு இதுவென்றே கூறவேண்டியிருக்கிறது.

 இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.