(நா.தனுஜா)

நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு உதவிய அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது. மாறாக அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளத்தக்க அனைத்து செயற்பாடுகளையும் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மேலும், நாட்டில் 2015 ஆம் ஆண்டிற்கு முன்புவரை ஏகாதிபத்திய ஆட்சிமுறையொன்றே நிலைபெற்றிருந்தது. அந்த நிலையை மாற்றி, ஜனநாயக இடைவெளியொன்றை ஏற்படுத்தும் விதமாகவே நாம் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றினோம்.

ஆனால் தற்போது பதவியேற்றிருக்கும் புதிய அரசாங்கம் ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்திய 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று கூறிவருகிறது. அதன்மூலம் நாட்டில் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் காணப்பட்ட ஏகாதிபத்தியவாத ஆட்சிமுறையொன்றையும், ஏகாதிபத்திய தலைமைத்துவத்தையும் நோக்கி மீண்டும் நகர்வதற்கு முற்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு உதவிய அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது. மாறாக அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளத்தக்க அனைத்து செயற்பாடுகளையும் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கும்.

அடுத்ததாக அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராகப் பதவிவகிக்க முடியாது. அதனால் தற்போதுவரை யாரும் பாதுகாப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவில்லை. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மாத்திரமே சத்தியப்பிரமாணம் செய்திருக்கிறார். எனவே நாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையேற்பட்டிருக்கிறது என்றார்.