விவசாயம் என்பது இலங்கை மக்களின் வாழ்க்கையில் ஊறிப்போன ஒன்றாக காணப்படுகின்றது. இலங்கையானது விவசாயத்தில் விருத்தி கண்டபோதும் விவசாயிகளின் முன்னேற்றம் இன்னும் கேள்விக்குரியாகத்தான் விளங்குகின்றது.

விவசாயத்துறையில் பல்வேறு நவீன மாற்றங்களும், புதிய இயந்திர உபகரணங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த யுகத்தில் இலங்கையில் விவசாயிகளுக்கு அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகும்.

வயல் உழுது, சேற்றில் குளித்து, வியர்வை சிந்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான நெல்லையும், மரக்கறி வகைகளையும் அறுவடை செய்வதற்காக பாடுபடும் செய்கையாளர்களின் கஷ்டங்களையும் சிரமங்களையும் உரிய தரப்பினர் முறையாக அடையாளம் கண்டு நிறைவேற்றாததால், விவசாய செய்கையின் வளர்ச்சி தற்காலத்தில் மிகவும் குன்றிய நிலையில் காணப்படுகின்றது.

அந்த வகையில், பதுளை மாவட்டத்தின் வெலிமடை - கெப்பட்டிபொல பிரதான பாதையில் அமைந்துள்ள எரபத்த கிராம மரக்கறி செய்கையாளர்கள் தங்களின் அறுவடைகளை வயல் காணிகளின் ஊடாக செல்லும் மிகவும் குறுகிய ஒற்றையடிப் பாதையூடாக பிரதான பாதைக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டுள்ளது.

சுமார் 200 விவசாயிகள் பாரம்பரியமாக எரபத்த கிராமத்திலுள்ள வயல் காணிகளில் நீ்ண்டகாலமாக பெரும்போக மற்றும் சிறுபோக செய்கைகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கும் அப்பால் வியாபித்து காணப்படுகின்ற தமது செய்கை நிலங்களுக்கு தேவையான உரம் மற்றும் பொருட்களை பிரதான பாதையில் இருந்து கொண்டு செல்வதற்கும், அறுவடைகளை பொதியிட்டு மீண்டும் பிரதான பாதைக்கு கொண்டுசென்று, சந்தையில் சேர்ப்பதற்கும் இந்த விவசாயிகள் பல்வேறு கஷ்டங்களையும், துயரங்களையும் அனுபவித்து வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக எரபத்த பிரதேச கமநல சங்கத்தின் செயலாளரான ஏ. சந்திராவதி பின்வருமாறு தௌிவுபடுத்துகின்றார்.

"எமக்கு பாரிய பிரச்சினை உள்ளது. வயலுக்கான பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஓரளவு தூரத்திற்கு அருகில் ஆறு ஓடுகிறது. வயலின் ஒருபகுதி ஆற்றினுள் சரியும் அபாயம் நிலவுகிறது. அதனையும் செய்வதோடு வயல் மேற்பரப்பு வரை மரக்கறி உரம் என்பவற்றை கொண்டுசெல்ல வழிப்பாதை அத்தியாவசியமாகும். அதிகாரிகள் உன்னிப்பாக கவனம் செலுத்தி செய்துதர வேண்டும்."

பரந்து விரிந்த இந்த வயல் காணிகளின் பிரச்சினைக்குரிய மிகக் குறுகிய வழிப்பாதை ஊடாக முன்னோக்கிச் செல்லும்போது இந்த விவசாயிகளின் கடின உழைப்பினால் இந்த  வயல் காணிகளில்  போஞ்சி, கரட், மரவௌ்ளி உட்பட பல்வேறு மரக்கறி வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் சரியான வழிப்பாதை இன்மையாலும், பாவனையிலுள்ள குறுகிய பாதை சீரின்மையுடன் காணப்படுவதாலும் தங்களின் அறுவடைகளுக்கு சேத மேற்படாமல் பிரதான பாதைக்குக் கொண்டுவருவதற்கும், அவற்றை உரியவாறு நல்ல விலைக்கு சந்தைக்கு விநியோகிப்பதற்கும் அதிக பிரயத்தனங்களை மேற்கொள்ள நேரிட்டுள்ளதாக எரபத்த செய்கையாளரான ஏ.எம். யாப்பா பண்டார கூறுகின்றார்.

"இந்த சிறிய வழியால் தான் நாம் பாதையில் இருந்து பொருட்கள், உரம் மற்றும் விதை மூட்டைகளையும் வயல்களுக்கு கொண்டு வருகின்றோம். பாடசாலைகளுக்குப் பிள்ளைகள் செல்கின்றனர். வேலைக்கு ஆட்கள் செல்கின்றனர். மழை நேரங்களில் செல்வது சிரமம். பாதை சறுக்கும் தன்மை கொண்டது. இரண்டு பேர் மாறிச் செல்வதற்கு அல்லது முச்சக்கர வண்டி செல்லக்கூடிய வகையில் நிர்மாணித்து விவசாயிகளை மேம்படுத்துமாறு கோருகின்றோம்"

ஒருதுளி நீரையும் விவசாயத்திற்காக அன்றி வெறுமனே கடலில் கலப்பதற்கு இடமளிக்க மாட்டேன் என சூளுரைத்த பராக்ரமபாகு மன்னன் வாழ்ந்த நாடு எமது இலங்கை திருநாடு.

ஒரு காலத்தில் விவசாயத்தில் தன்னிறைவு கண்டு, கொடி கட்டிப் பறந்த இலங்கை இன்று, உரிய கவனம் செலுத்தப்படாமலும், விவசாயத்திற்கு தேவையான உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமலும் கவனிப்பாரின்றி காணப்படுவதால் பிற நாடுகளில் இருந்து அரிசி உள்ளிட்ட தானியங்களை இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளது என்றால் மிகையாகாது.

எனவே கடும் உழைப்பாளிகளான விவசாயிகளை மேம்படுத்துவதன் மூலமே மீண்டும் விவசாயத்தில் தன்னிறைவை எட்ட முடியும் என்பதை உணர்ந்து, எரபத்த விவசாயிகளின் பிரச்சினையை செவிமடுத்து, அவர்களது வயல்களின் ஊடாக செல்லும் வழிப்பாதையை உரிய முறையில் நிர்மாணித்துக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- ரஸூல்